சென்னை

ரூ.1 கோடி போதைப் பொருள்கள் பறிமுதல்: இருவர் கைது

30th Jul 2019 04:35 AM

ADVERTISEMENT


 கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 1 கோடி மதிப்பிலான போதைப் பொருள்களை வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.  மேலும் இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். 
வடசென்னையில் உள்ள ஒரு வீட்டில் போதைப் பொருள்கள் பதுக்கி வைத்திருப்பதாக வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பந்தப்பட்ட வீட்டில் அதிகாரிகள் திங்கள்கிழமை சோதனையில் ஈடுபட்டனர். 
அப்போது அங்கு 1.5 கிலோ எடையுள்ள கேட்டமைன் போதைப் பொருள் சிக்கியது. அதைப் பதுக்கி வைத்திருந்த நபரை அதிகாரிகள் கைது செய்தனர். இதையடுத்து பிடிபட்ட நபரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில்,  அவர் ஏற்கெனவே ராமேசுவரத்தில் உள்ள தனது கூட்டாளியிடம் மெத்பெட்டமைன் என்ற போதைப் பொருளை கொடுத்து அதை கடல் வழியாக இலங்கைக்கு அனுப்ப கூறியிருப்பது தெரியவந்தது. 
 இதையடுத்து ராமேசுவரம் சென்ற நபரை பிடிக்க நடவடிக்கை எடுத்தனர்.  அந்த நபர் சென்னை வானகரம் போரூர் சுங்கச்சாவடி பகுதியில் வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வந்த ஒரு பேருந்தில் அந்த நபர் சோப்புக் கட்டிகள் அளவில் 12 கிலோ மெத் பெட்டமைன் போதைப் பொருளை பையில் மறைத்து வைத்திருந்தார்.
அவரை கைது செய்த அதிகாரிகள், அந்தப் போதைப் பொருளையும் பறிமுதல் செய்தனர்.  பறிமுதல் செய்யப்பட்ட கேட்டமைன் மற்றும் மெத் பெட்டமைன் போதைப் பொருள்களின் மதிப்பு ரூ.1 கோடிக்கும் மேல் இருக்கும் என வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT