சென்னை ராயப்பேட்டையில் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள வி.பாஞ்சாலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னப்பராஜ் செல்வம் (20). இவர் சென்னை ராயப்பேட்டை தெய்வசிகாமணி தெருவில் ஒரு கட்டடத்தை இடித்து புதிய கட்டடம் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலை செல்வம் அங்கு அடித்துக் கொலை செய்யப்பட்டு சடலமாகக் கிடந்தார்.
இதுதொடர்பாக ராயப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினர். இதில், அங்கு பணிபுரியும் கடலூர் மாவட்டம், திட்டக்குடி லக்கூர் பகுதியைச் சேர்ந்த ம.முல்லைநாதனுடன் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் இரும்புக் கம்பியால் செல்வத்தை அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக முல்லைநாதனை போலீஸார் தேடி வருகின்றனர்.