சென்னை

ரூ.63 லட்சம் கடத்தல் பொருள்கள் பறிமுதல்

29th Jul 2019 02:58 AM

ADVERTISEMENT

சென்னை விமான நிலையத்தில் ரூ.63.2 லட்சம் மதிப்பிலான கடத்தல் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. 
இதுகுறித்து சென்னை விமான நிலைய ஆணையரகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
சென்னை விமான நிலையத்தில் நிகழும் கடத்தல்கள் குறித்து வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கொழும்பில் இருந்து வந்த சாகுல் ஹமீது பாதுஷா என்பவரிடம் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அவர் மலக்குடலில் மறைத்து வைத்திருந்த 326 கிராம் அளவிலான தங்கம் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 
இதன் மதிப்பு ரூ.11.80 லட்சம். இதே போல் துபையில் இருந்து வந்த செய்யது அபுதாகிர் மற்றும் சுக்கூர் ஆகியோரிடம் நடத்தப்பட்ட சோதனையில் 766 கிராம் அளவிலான தங்கம் அவர்களது மலக்குடலில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 
இதன் மதிப்பு ரூ.27.6 லட்சம். மேலும் அவர்கள் மறைத்து வைத்திருந்த ரூ.2.8 லட்சம் மதிப்பிலான 2 தங்கக் கட்டிகளும், ரூ.2 லட்சம் மதிப்பிலான 38 பயன்படுத்தப்பட்ட மடிக்கணினிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. 
இதே போல் துபையில் இருந்து வந்த முகமது தன்வீர் என்பவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் 525 கிராம் அளவிலான தங்கம் அவரது உடைமைகளில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.19 லட்சம். 
இவ்வாறு 4 பேரிடம் ரூ.63.2 லட்சம் மதிப்பிலான கடத்தல் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து அவர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT