சென்னையில் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் வசதிக்காக, 6 ரயில் நிலையங்களில் புதியதாக உணவு கடைகள் ஜூலை இறுதியில் திறக்கப்பட உள்ளன.
கோயம்பேடு, திருமங்கலம், அண்ணாநகர் கிழக்கு, ஷெனாய் நகர், கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா ஆகிய ரயில் நிலையங்களில் 10 முதல் 35 சதுர மீட்டர் பரப்பளவில் ஒவ்வொரு கடையும் அமைக்கப்படுகிறது. இந்த மாதம் இறுதியில் புதிய கடைகள்திறக்கப்பட உள்ளன. 3 உணவகக் கடைகள் தானியங்கி எந்திரம் மூலம் செயல்படும். இதன்மூலமாக, தின்பண்டங்கள், குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படும்.
அண்ணாசாலை வழித்தடத்தில் அண்ணாசாலை, நந்தனம், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை ரயில் நிலையங்களில் 3 முதல் 6 மாதங்களில் உணவக கடைகள் திறக்கப்பட உள்ளன. இதுதவிர, சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் வணிக வளாகம் அமைக்கப்படுகிறது.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியது: மெட்ரோ ரயில் பயணிகள் வசதிக்காக, பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள 6 சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களில் சுவையான உணவு கடைகள் ஜூலை இறுதியில் திறக்கப்படுகின்றன. அண்ணாசாலை வழித்தடத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் 6 மாதத்துக்குள் உணவு கடைகள் திறக்கப்படும். பிரபல நிறுவனங்களின் குளிர்பானம், உணவு விற்பனை செய்யப்படவுள்ளன. இதுதவிர, உயர்மட்ட வழித்தட ரயில் நிலையங்களான ஆலந்தூர், வடபழனி, அசோக்நகர், விமான நிலையம் ஆகிய பகுதிகளில் தற்போது பிரபலமான உணவுகடைகள் செயல்பட்டு வருகின்றன. காபி, தேநீர், தின்பண்டங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மெட்ரோ ரயில் பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்ய இந்த கடைகள் உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் அவர்.