ஆவடி அருகே உள்ள அண்ணனூர் பகுதியைச் சேர்ந்தவர் காளீஸ்வரி (66). இவர் கடந்த 4-ஆம் தேதி வில்லிவாக்கத்தில் செங்குன்றம் சாலையில் நடந்து சென்றபோது, அங்கு வந்த ஒரு இளைஞர், காளீஸ்வரியிடம், இங்கு திருடர்கள் நடமாட்டம் அதிகம். எனவே, அணிந்திருக்கும் நகையைக் கொடுங்கள்.
காகிதத்தில் பொதிந்து தருகிறேன் என்று கூறி நகையைப் பெற்று பொதிந்து கொடுத்துள்ளார். அவருடன் மேலும் இரு இளைஞர்கள் உடனிருந்தனராம்.
சிறிது நேரத்துக்குப் பின்னர் காளீஸ்வரி, அதனை பிரித்துப் பார்த்தபோது, அதில் நகைக்கு பதிலாக கல் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்த புகாரின்பேரில் வில்லிவாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணையில் இச் சம்பவத்தில் ஈடுபட்டது பழைய வண்ணாரப்பேட்டை ஆட்டோ ஓட்டுநர் நபீர் (36), திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு சையத் (36) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார், இருவரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். மேலும் ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.