சென்னை

வெளிநாட்டுப் பணம் என காகிதக் கட்டுகளை கொடுத்து மோசடி: வடமாநில கும்பல் கைது

22nd Jul 2019 03:48 AM

ADVERTISEMENT

 

சவூதி ரியால் எனக் கூறி காகிதக் கட்டுகளைக் கொடுத்து நூதன முறையில் பண மோசடியில் ஈடுபட்ட  8 பேர் கொண்ட வடமாநில கும்பலை திருவான்மியூர் போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பர்வேஸ் ஆலம். செளகார்பேட்டை பகுதியில் "செல்போன் டெம்பர் கிளாஸ்' விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடந்த 17-ஆம் தேதி இவரது கடைக்கு வந்த வட மாநில இளைஞர்கள் இருவர், தங்களிடம் ரூ.18 லட்சம் மதிப்பிலான சவூதி ரியால் உள்ளதாகவும், தங்களது அவசரத் தேவைக்குப் பணம் தேவைப்படுவதால், ரியாலை மாற்றித் தரும்படி கேட்டுள்ளனர். 

மேலும் திருவான்மியூரில் பணம் இருப்பதாகவும், அங்கு வந்து நேரில் பார்த்துவிட்டு பணத்தை வாங்கிக் கொள்ளுமாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து  2 நாள்களுக்கு முன்பு பர்வேஸ் ஆலம் திருவான்மியூர் சென்றுள்ளார்.

ADVERTISEMENT

அங்கு அவரிடம் வடமாநில இளைஞர்கள் சவூதி ரியால் பணக்கட்டுகளைக் காண்பித்து, போலீஸ் கெடுபிடி அதிகமாக இருப்பதால், கடைக்குச் சென்று பிரித்துப் பாருங்கள் எனத் கூறியுள்ளனர். 

இதனையடுத்து பர்வேஸ் ஆலம், ரூ.3 லட்சம்  மதிப்பிலான இந்திய ரூபாய் நோட்டுகளை வடமாநில இளைஞர்களிடம் கொடுத்துவிட்டு, அவர்கள் கொடுத்த பணப்பையை வாங்கிச் சென்றுள்ளார். பின்னர் கடைக்குச் சென்று பிரித்து பார்த்தபோது, பணக்கட்டுகளின் மேல்புறத்தில் ஒரு ரியால் நோட்டு மட்டுமே இருந்தது. மீதமிருந்த அனைத்தும் வெற்றுக் காகிதங்களாக இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பர்வேஸ் ஆலம், திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.  

இதனையடுத்து திருவான்மியூர் உதவி ஆணையர் ரவி தலைமையில் தனிப்படை அமைத்து போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். மேலும் பணப் பரிமாற்றம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு வடமாநில மோசடி கும்பலைச் சேர்ந்த சுமன், பிலால், ஜாபர், ஜாகிர் உள்பட 6 ஆண்கள், 2 பெண்களை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாகி விட்ட மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT