சென்னை

புத்தாண்டு நள்ளிரவில் கோயில்களைத் திறக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி

22nd Jul 2019 03:55 AM

ADVERTISEMENT

 

ஆங்கிலப் புத்தாண்டு உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் புத்தாண்டு தினத்தில் இந்துக் கோயில்களை நள்ளிரவில் திறக்க தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் அஸ்வத்தாமன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ஆகம விதிகளின்படி இந்து கோயில்கள் கட்டப்படுகின்றன. ஆகம விதிகளின்படி இரவு 9 மணிக்கு நடை சாத்தப்பட்டு, காலை 4.30 மணியிலிருந்து 6 மணிக்குள் பிரம்ம முகூர்த்தத்தில் மீண்டும் திறக்கப்படும். சைவ, வைணவ கோயில்களில் மஹா சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி நாள்களில் நள்ளிரவில் இந்து கோயில்கள் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆனால் ஆங்கில புத்தாண்டு உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் பண்டிகை தினத்தில் இந்து கோயில்கள் திறக்கப்படுகின்றன. 

புத்தாண்டு தினத்தில் இந்துக் கோயில்களை திறக்கக் கூடாது என ஆந்திர அரசு கடந்த 2017-ஆம் ஆண்டு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. எனவே இந்து கோயில்களை மேற்கத்திய புத்தாண்டு தினங்களில் நள்ளிரவில் திறக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். 

ADVERTISEMENT

இந்த மனு, நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம்பிரசாத் ஆகியோர் கொண்ட அமர்வில்  அண்மையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆந்திர மாநில அரசின் உத்தரவு தமிழக அரசுக்குப் பொருந்தாது, மேலும், இதேபோன்ற கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் ஏற்கெனவே தள்ளுபடி செய்துள்ளது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT