சென்னை

கடற்கரை-வேளச்சேரி ரயில் நிலையங்களில் தனியார் பாதுகாவலர்களை நியமிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு

22nd Jul 2019 04:05 AM

ADVERTISEMENT

 

கடற்கரை-வேளச்சேரி மார்க்கத்தில் பறக்கும் ரயில் நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், 350 தனியார் பாதுகாவலர்களை நியமிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. டெண்டர் விடப்பட்டு, தனியார் பாதுகாவலர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்.பி.எஃப்.) அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை கடற்கரை-வேளச்சேரி மார்க்கத்தில் உயர்நிலை பாதையில் (பறக்கும்) ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த மார்க்கத்தில் தினமும் 100-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இங்குள்ள பறக்கும் ரயில் நிலையங்களில் இரண்டு தளங்கள் உள்ளன. அதில் தரை தளத்தில் டிக்கெட் கவுன்ட்டர்களும், 2-ஆவது தளத்தில் ரயில்களும் இயக்கப்படுகின்றன. பயணிகள் தரை தளத்தில் டிக்கெட் எடுத்துவிட்டு  ரயிலில் ஏற 2-ஆவது தளத்துக்கு செல்ல வேண்டும். இங்கு காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகமாகவும், இரவு நேரங்களில் பயணிகள் எண்ணிக்கை குறைவாகவும் இருக்கும். பயணிகளின் வரத்து குறைவாக இருப்பதால் ஏராளமான குற்றச் சம்பவங்களும் நிகழ்கின்றன.  

தரமணி பறக்கும் ரயில் நிலையத்தில் கடந்த ஜனவரி மாதம் இரவு மயிலாப்பூர் செல்வதற்காக காத்திருந்த இளம்பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக 3 பேர் ரயில்வே போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, ரயில்வே போலீஸார் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

ADVERTISEMENT

இந்நிலையில், கடற்கரை-வேளச்சேரி மார்க்கத்தில் பறக்கும் ரயில்நிலையங்களில் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், தனியார் பாதுகாவலர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 360 தனியார் பாதுகாவலர்களை நியமிக்கப்பட உள்ளனர். இந்தப்  பணியில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. ரயில்வே பாதுகாப்புப் படை சார்பில், தனியார் பாதுகாவலர்களை பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு டெண்டர் விடப்பட்டு, அதில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் அதிக அளவில் பணியாற்றும் நிறுவனத்துக்கு  டெண்டர் வழங்கப்பட உள்ளது.

இது குறித்து ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறியது: பறக்கும் ரயில் நிலையங்களில் பயணிகளின் பாதுகாப்புக்காக 360 காலியிடங்களை தனியார் பாதுகாவலர்கள் கொண்டு நிரப்பிய பின்பு, அவர்களை அனைத்து பறக்கும் ரயில் நிலையத்திலும் ரயில்வே பாதுகாப்புப் படையினருடன் இணைந்து பாதுகாப்பில் ஈடுபடுத்த உள்ளோம். ஒரு ரயில் நிலையத்தில் 3 ரயில்வே பாதுகாப்புப் படையினருடன், 5 தனியார் பாதுகாவலர்கள் நியமிக்க உள்ளோம். குறிப்பாக மாலை வேளைகளில் முதல் தளத்தில் பாதுகாப்பு அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் ரயில் நிலையம் முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் வந்து விடும். தனியார் பாதுகாவலர்களை நியமிப்பது குறித்து ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. தனியார் பாதுகாவலர்களுக்கான நிறுவனங்களுக்கு டெண்டர் விடும் பணி விரைவில் தொடங்கப்பட்டு, அதன் பிறகு, தனியார் பாதுகாவலர்கள்  நியமிக்கப்படவுள்ளனர் என்றனர் அவர்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT