சென்னையில் பாரத் கலாசார மையம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் 55 பேருக்குப் பரிசு வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாளையொட்டி, பாரத் கலாசார மையம், பாரத் பெட்ரோலியம், ஆர்விஐ நிறுவனம் சார்பில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழா தியாகராய நகரில் உள்ள சர் பிட்டி தியாகராய அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், பாரத் கலாசார மையத்தின் நிறுவனருமான எம்.ராஜாராம் தலைமை வகித்தார்.
உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபி பிரதீப் வி பிலிப் கலந்துகொண்டு பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற 55 மாணவர்களுக்கு சான்றிதழ்கள், கை கடிகாரங்களை வழங்கிப் பாராட்டினார். முன்னதாக, மாணவர்களின் திருக்குறள் நாட்டிய நாடகம் நடைபெற்றது.
இந்த விழாவில், அண்ணா நகர் காவல் துணை ஆணையர் முத்துசாமி, பெருநகர சென்னை மாநகராட்சி முதன்மைக் கல்வி அலுவலர் இ.கோவிந்தசாமி, பாரத் கலாசார மையத்தின் அறங்காவலர்கள் ஸ்வர்ணலட்சுமி, சி.சிவக்குமார், முரளி சுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.