அண்ணா பல்கலைக்கழகத்துக்குள்பட்ட மூன்று கல்லூரிகளில் பொறியியல் படிப்புகளில் சேர்க்கை பெற்றுள்ள மாணவர்களுக்கான கல்விக் கட்டணம், வகுப்புகள் எப்போது தொடங்கப்படும் என்பன உள்ளிட்ட விவரங்களை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, கிண்டி பொறியியல் கல்லூரியில் இளநிலை பொறியியல் படிப்புகளில் சேர்ந்துள்ள தமிழக மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் ரூ. 33,560 என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருமுறை கட்டணம் ரூ. 9,560, பிணைத் தொகை ரூ. 9,000 மற்றும் ஒரு பருவத்துக்கான கட்டணம் ரூ. 15,000 ஆகியவை அடங்கும். கலந்தாய்வின்போது மாணவர் செலுத்திய முன்வைப்புத் தொகை ரூ. 5 ஆயிரத்தைக் கழித்துவிட்டு, ரூ.28,560 தொகையை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
அதுபோல, மற்ற கல்லூரிகளான அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் குரோம்பேட்டை எம்.ஐ.டி. கல்லூரிகளில் இளநிலை பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் ரூ. 32,160-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருமுறை கட்டணம் ரூ. 8,160, பிணையத் தொகை ரூ. 9000 மற்றும் ஒரு பருவத்துக்கான கட்டணம் ரூ. 15,000 ஆகியவை அடங்கும்.
கலந்தாய்வின் போது செலுத்திய முன்வைப்புத் தொகை ரூ. 5 ஆயிரத்தை கழித்துவிட்டு ரூ. 27,160 தொகையை ஆன்லைனில் செலுத்த வேண்டும். இந்த மூன்று கல்லூரிகளிலும் வரும் 29-ஆம் தேதி வகுப்புகள் தொடங்க உள்ளன. அன்று முதல் இரண்டு வாரங்களுக்கு அறிமுக வகுப்புகள் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.