சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் புகையில்லா வாகனத்தை இயக்க சென்னை விமான நிலையத்தில் இரண்டு புதிய பேட்டரி கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலையத்தின் உள்பகுதியில் தற்போது விமானங்கள் புறப்படும்போதும், தரை இறங்கும்போதும் விமான நிலைய நிலைய ஊழியர்கள் பாதுகாப்பு பணிக்காக பயன்படுத்தும் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை, சுற்றுச்சூழலை பெருமளவில் பாதிக்கிறது. மேலும் அதற்காக பயன்படுத்தப்படும் எரிபொருளால் அதிகளவில் செலவாகிறது. இதை தவிர்க்க இரண்டு புதிய பேட்டரி கார்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தக் கார்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் சென்னை விமான நிலையத்தின் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்த பேட்டரி கார்களால் எரிபொருள் சிக்கனமாகும். மேலும் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.1-க்கும் குறைவாகவே செலவாகிறது.
இந்த காரின் பேட்டரிகளை மின்சாரத்தில் சார்ஜ் செய்தால் 110 கிலோ மீட்டர் வரை ஓட்ட முடியும் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்ய 14 யூனிட் மின்சாரம் தேவைப்படும். ஒரு யூனிட்டுக்கு ரூ. 7 மின்சார கட்டணம் செலவாகும். சென்னை விமான நிலையத்தில் குப்பைகளை அகற்றும் பணியில் ஏற்கெனவே 2 பேட்டரி வாகனங்கள் பயன்டுத்தப்பட்டு வருகின்றன.