சென்னை

நிலத்தடி நீர் திருட்டு வழக்கு: காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

12th Jul 2019 04:26 AM

ADVERTISEMENTசென்னை உயர்நீதிமன்றத்தில் நங்கநல்லூர், பழவந்தாங்கல் பகுதிகளில் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி வணிக நோக்கத்துக்குப் பயன்படுத்துவதாகவும், இந்த சட்டவிரோத நீர்த் திருட்டை அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை எனக்கூறி இளையராஜா என்பவர் பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தார். இதே போன்று சென்னை கெளரிவாக்கம் பகுதியில் விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சி எடுக்கப்படுவதைத் தடுக்கக் கோரி நாகேஸ்வர ராவ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், சட்டவிரோத நிலத்தடி நீர்த் திருட்டு விற்பனைச் செய்யப்படுவது குறித்து ஆய்வு செய்து அறிக்கைத் தாக்கல் செய்ய வழக்குரைஞர் ஆணையராக எல்.சந்திரகுமாரை நியமித்து உத்தரவிட்டிருந்தது. 
இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம்பிரசாத் ஆகியோர் கொண்ட அமர்வில்  வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் இணை ஆணையர் மகேஸ்வரி ஆஜராகியிருந்தார்.  வழக்குரைஞர் ஆணையர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், சம்பந்தப்பட்ட பகுதிகளில் நாள்தோறும் 250 முதல் 300 லாரிகளில் சட்டவிரோதமாக தண்ணீர் எடுத்துச் செல்லப்படுகிறது. மேலும் இந்த தண்ணீர் திருட்டுக்கு விவசாயத்துக்காக வழங்கப்பட்ட இலவச மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. இந்த சட்டவிரோத நிலத்தடி நீர்த் திருட்டுக்கு பழவந்தாங்கல் காவல் ஆய்வாளர் நடராஜ் உடந்தையாக இருந்து வருகிறார். உயர்நீதிமன்றம் நியமித்த வழக்குரைஞர் ஆணையர் ஆய்வுக்குச் சென்ற போது, முன்அனுமதி பெறாமல் எப்படி ஆய்வுக்கு வரலாம் என மிரட்டல் விடுத்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், சட்டவிரோத நிலத்தடி நீர்த்திருட்டு விவகாரத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகள் மாநிலம் முழுமைக்கும் பொருந்தும். பழவந்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் சட்டவிரோத நிலத்தடி நீர்த்திருட்டு குறித்து காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும். நிலத்தடி நீர்த்திருட்டு நடைபெறுவதாக அறிக்கைத் தாக்கல் செய்துள்ள வட்டாட்சியர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சட்ட விரோத நிலத்தடி நீர்த்திருட்டில் ஈடுபடுபவர்கள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருப்பவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 378 மற்றும் 379 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். 
நீர்த்திருட்டு தொடர்பாக முரண்பட்ட அறிக்கையைத் தாக்கல் செய்ததோடு, வழக்குரைஞர் ஆணையரை மிரட்டிய பழவந்தாங்கல் காவல் ஆய்வாளர் மீது துறை ரீதியான ஒழுங்கு மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும், உத்தரவிட்டனர். 
மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் எடுத்துச் செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படாதது குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், அதிகாரத்தைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியர், காவல்துறைக் கண்காணிப்பாளர், வணிகவரித்துறை அதிகாரி உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் என எச்சரிக்கை விடுத்து, சட்டவிரோத நிலத்தடி நீர்த்திருட்டு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூலை 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT