சென்னை

மதுராந்தகம் ஏரியைத் தூர்வாரி சுற்றுச்சுவர் எழுப்பக் கோரிய வழக்கு: ஆட்சியருக்கு நோட்டீஸ்

4th Jul 2019 04:29 AM

ADVERTISEMENT


மதுராந்தகம் ஏரியைத் தூர்வாரி ஆழப்படுத்துவதுடன் ஏரியைச் சுற்றி 5 மீட்டர் உயரத்தில் சுற்றுச்சுவர் எழுப்ப உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இது தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கும் , காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கும் நோட்டீஸ்  பிறப்பித்து உத்தரவிட்டது. 
சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.நிர்மல்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்தில் உள்ள ஏரி 2 ஆயிரத்து 846 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியை நீர் ஆதாரமாகக் கொண்டு சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏராளமான கிராமங்களில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது ஏரிப் பகுதியில் பல்வேறு வகையான ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு, ஏரியின் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. எனவே ஏரியைத் தூர்வாரி ஆழப்படுத்துவதுடன், ஏரியைச் சுற்றி 5 மீட்டர் உயரத்தில் சுற்றுச்சுவர் எழுப்ப அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். 
இந்த மனு, நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம்பிரசாத் ஆகியோர் கொண்ட  அமர்வில்  புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு தொடர்பாக தமிழக அரசும், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரும்  2 வார காலத்துக்குள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து விசாரணையை ஒத்திவைத்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT