சென்னை

போக்குவரத்து ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம்: சென்னையில் பேருந்துகள் இயங்காததால் பயணிகள் அவதி

2nd Jul 2019 04:18 AM

ADVERTISEMENT


சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் திங்கள்கிழமை காலை  போரட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.  போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டதை அடுத்து நண்பகலுக்கு பிறகு பேருந்து போக்குவரத்து சீரானது.
ஜூன் மாதத்துக்கான ஊதியம், மாநகரப் போக்குவரத்து  ஊழியர்களுக்கு வழங்கப்படாததைக் கண்டித்து திங்கள்கிழமை காலை பணிக்கு வந்த ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதனால் கோயம்பேடு, அம்பத்தூர், திருவொற்றியூர், எண்ணூர், தியாகராய நகர், வடபழனி, குன்றத்தூர், குரோம்பேட்டை உள்ளிட்ட முக்கிய இடங்களில் உள்ள பேருந்து நிறுத்தங்கள், பணிமனைகளில் இருந்து பேருந்துகள் இயக்கப்படவில்லை. 
மாணவர்கள், ஊழியர்கள் அவதி:  சென்னையில் உள்ள 30-க்கும் மேற்பட்ட பணிமனைகளில் இருந்து  குறைவான பேருந்துகளே இயக்கப்பட்டன. இதனால் பேருந்துகள் மூலம் அலுவலகம், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் அனைத்துத் தரப்பினரும் வெகுவாகப் பாதிக்கப்பட்டனர். 
60 சதவீத சம்பளம் மட்டுமே: இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கூறியது: வழக்கமாக 28- ஆம் தேதி சம்பளம் வழங்கப்படும். ஆனால் இன்றுவரை பெரும்பாலானோருக்கு சம்பளம்  வழங்கப்படவில்லை. 
ஒரு சிலருக்கு முழு சம்பளமும் வழங்காமல் 60 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டது. ஏற்கெனவே எங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை வழங்கப்படவில்லை. கூடுதல் பணி நேரத்துக்கான ஊதியம் வழங்கப்படுவதில்லை. விடுமுறை இல்லை. இதுபோன்ற பிரச்னைகளால் நாங்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது எந்த விதமான முன் அறிவிப்பும் இல்லாமல் திடீரென சம்பளம் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே அரசு எங்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 
போராட்டம் வாபஸ்:  இது குறித்து தொழிற்சங்கத்தினர் அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியது: ஊதியம் வழங்கும் பிரச்னையில், வேலை நிறுத்தம் செய்த பிறகே அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இந்தப் பிரச்னை இனியும் தொடராது என அரசு உறுதி அளித்துள்ளது. 
62 சதவீத ஊதியம் மட்டுமே இதுவரை வழங்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 38 சதவீத ஊதியமும் உடனே வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து மாநகரப் போக்குவரத்துக் கழக வேலை நிறுத்தப் போராட்டம் திரும்பப் பெறப்படுகிறது. 
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை கிடையாது என  அரசு கூறியுள்ளது. இந்த வாக்குறுதியை மீறினால் மீண்டும் போராட்டம் நடைபெறும். இனி வழக்கம் போல் பேருந்துகள் இயங்கும் என்றார்.
அமைச்சர் விளக்கம்:  இது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியது:
  வங்கிகள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் இந்த கால தாமதம்.  போக்குவரத்து ஊழியர்கள் அனைவருக்கும் உடனடியாக  சம்பளம் வழங்கப்படும்.  அவர்களுக்கு எவ்விதமான ஊதியக்குறைப்பும் செய்யப்படவில்லை. இதுகுறித்து அவர்களை அழைத்து பேசியதன் மூலம் தொழிற்சங்க பிரதிநிதிகள் வேலை நிறுத்தத்தைத் திரும்பப் பெறுவதாக உறுதியளித்தனர்.
போக்குவரத்துக் கழகங்கள் லாப நோக்குடன் இயக்கப்படுவதில்லை. இதனால் எந்த ஆட்சியிலும் போக்குவரத்துத் துறையில் நிதிப் பற்றாக்குறை இருக்கும். தற்போது புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளதால் வருவாய் சற்று அதிகரித்து உள்ளது. மேலும் நிதி நெருக்கடி குறித்து முதல்வரிடம் எடுத்துக் கூறி உள்ளோம். அவரும் தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார் எனப் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
இதனிடையே அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் நடைபெற்ற நேரத்தில் ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக பொதுமக்கள் தரப்பில் புகார் கூறினர்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT