திருவெறும்பூர் ரயிலடி ஆஞ்சநேயர் கோயிலுக்கு விரைவில் குடகுழுக்கு நடத்தப்படும் என்று சட்டப் பேரவையில் தமிழக அரசு உறுதியளித்தது.
பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின்போது, திமுக உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தனது (திருவெறும்பூர்) தொகுதியில் உள்ள ரயிலடி பக்த ஆஞ்சநேயர் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக கேள்வி எழுப்பினார். அப்போது நடந்த விவாதம்:
அன்பில் மகேஷ்: ஆஞ்சநேயர் கோயில் குடமுழுக்கு தொடர்பாக கடந்த ஆண்டு சட்டப் பேரவையில் கோரிக்கை வைக்கப்பட்டது. இரண்டு மாதங்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவித்தாலும் குடமுழுக்கு நடத்தப்படவில்லை. இந்தக் கோயில் தொடர்பாக தொல்லியல் துறைக்குக் கடிதம் எழுதி விளக்கம் கோரப்பட்டது. கோயில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் வரவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. எனவே, விரைவில் குடமுழுக்கு நடத்த வேண்டும்.
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்: குடமுழுக்கு நடத்துவதற்கான மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு ஒப்பந்தப்புள்ளிகள் கோரி இந்த ஆண்டே குடமுழுக்கு செய்யப்படும் என்று தெரிவித்தார்.