சென்னை

சென்னையில் நெகிழி பூசப்பட்ட காகித கப் தொழிற்சாலைக்கு சீல்

2nd Jul 2019 04:23 AM

ADVERTISEMENT


சென்னை அம்பத்தூரில் இயங்கி வந்த தடை செய்யப்பட்ட நெகிழி பூசப்பட்ட காகித கப் தொழிற்சாலைக்கு மாசுக் கட்டுப்பாடு அதிகாரிகள் திங்கள்கிழமை சீல் வைத்தனர்.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் ஒருமுறை பயன்படுத்தப்படும் 14 வகையான நெகிழிகளின் விற்பனை, பயன்பாட்டுக்கு கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் தமிழக அரசு தடை விதித்தது. 
இதையடுத்து, உள்ளாட்சி அமைப்புகள், உணவுப் பாதுகாப்புத் துறை, சுற்றுச்சூழல் துறை சார்பில் தடை செய்யப்பட்ட நெகிழிகள் விற்பனை, பயன்பாடு, தயாரிப்பு குறித்து தொடர் சோதனைகள் நடத்தப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. 
சீல்: இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் அம்பத்தூர் மண்டலத்துக்கு உள்பட்ட சமுதர்யா நகரில் தடை செய்யப்பட்ட நெகிழி பூசப்பட்ட காகித கப் தொழிற்சாலை இயங்கி வருவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. 
இதையடுத்து, அங்கு சென்ற மாநகராட்சி, மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், அந்தத் தொழிற்சாலையைப் பூட்டி சீல் வைத்தனர்.  
மேலும், அந்தத் தொழிற்சாலையில் இருந்து  காகித கப் தயாரிக்க வைத்திருந்த 6 டன் மூலப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக, தொழிற்சாலையின் உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT