சென்னை

உருட்டுக் கட்டையால் தாக்கி இளைஞர் கொலை: நண்பர் கைது

2nd Jul 2019 04:21 AM

ADVERTISEMENT


சென்னை அம்பத்தூர் அருகே  உருட்டுக் கட்டையால் தாக்கி இளைஞர் கொலை செய்யப்பட்டார். இது  தொடர்பாக அவரது நண்பரை போலீஸார் கைது செய்தனர்.
அம்பத்தூர் அடுத்த மாதனாங்குப்பம் புத்தகரம் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோனி. இவர் அங்குள்ள ஆண்டாள் கோயில் தெருவில் பழைய இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள சின்னமாடன் குடியிருப்பைச் சேர்ந்த த.மணிகண்டன் (35), அதே ஊரைச் சேர்ந்த நா.முருகேசன் (31) ஆகியோர் வேலை செய்து வந்தனர்.
நண்பர்களான இருவருக்கும் இடையே அண்மையில் பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மதுபோதையில் இருந்த முருகேசன், மணிகண்டனிடம் தகராறு செய்தாராம். இதைப் பார்த்த அந்தோனி, முருகேசனை கண்டித்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் அன்றிரவு கடையில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த முருகேசன் உருட்டுக் கட்டையால் மணிகண்டனை தாக்கினராம்.
 இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் மயங்கி கீழே விழுந்தார். இதற்கிடையே மணிகண்டனின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள், அவரை மீட்டு அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். 
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து கொரட்டூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, முருகேசனை உடனடியாக கைது செய்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT