வெள்ளிக்கிழமை 19 ஏப்ரல் 2019

உள் நோயாளிகளுடன் இருப்பவர்களுக்கும் இலவச உணவு

DIN | Published: 15th January 2019 04:22 AM
ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை ஊழியர்களுக்கும், நோயாளிகளுடன் வருபவர்களுக்கும் உணவு வழங்கும் நிர்வாகிகள்.


மாநிலத்திலேயே முதன் முறையாக உள் நோயாளிகளுக்கு மட்டுமன்றி அவர்களுடன் இருப்பவர்களுக்கும் இலவசமாக உணவு வழங்கும் சேவை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. அவர்களுடன் மருத்துவமனையின் கீழ்நிலை ஊழியர்கள், துணை மருத்துவக் கல்வி மாணவர்கள், செவிலியர்கள் என நாளொன்றுக்கு குறைந்தது 500 பேருக்கு மதிய உணவு அங்கு வழங்கப்பட்டு வருகிறது.
ஷீரடி சத்ய சாய் அறக்கட்டளையின் நிதியுதவியுடன் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, மருத்துவமனைக்கு வரும் ஏழை மக்களும், அங்கு பணியாற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஊழியர்களும் பயனடைவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உணவு தயாரிப்பதற்கென ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சமையற்கூடம் கட்டப்பட்டுள்ளது. தற்போது வெளியிலிருந்து உணவு தருவிக்கப்படுவதாகவும், சமையற்கூடப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த பிறகு அங்கேயே உணவு தயாரிக்கப்படும் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறியுள்ளன.
சமையற்கூட கட்டுமானப் பணிகளை பொதுப் பணித் துறை மேற்கொண்டதாகவும், அதற்கான பராமரிப்பு மற்றும் மின் செலவினங்களை மருத்துவமனை ஏற்றுக் கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஓமந்தூரார் மருத்துவமனையின் தொடர்பு அதிகாரி டாக்டர் ஆனந்தகுமார் கூறியதாவது:
மருத்துவமனைக்கு வரும் எவரும் பசியால் வாடக் கூடாது என்ற நோக்கத்துக்காக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தினமும் ஒரு கலவை சாதம், தையல் இலையில் பரிமாறப்படுகிறது. வரும் நாள்களில் கூட்டு அல்லது பொரியலுடன் சாதம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த 2-ஆம் தேதி முதல் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான செலவை சத்ய சாய் அறக்கட்டளை ஏற்றுக் கொள்கிறது. விசேஷ தினங்களின்போதும், தங்களது பிறந்த நாள், திருமண நாள் ஆகிய நாள்களின் போதும் மருத்துவர்களும், தன்னார்வலர்களும் அச்செலவை தாமாக முன்வந்து ஏற்றுக் கொள்கிறார்கள்.
உரியவர்களுக்கும், வறியவர்களுக்கும் உணவிட வேண்டும் என்பதாலும், அதை வீணடிக்கக் கூடாது என்பதாலும் தற்போது நாள்தோறும் 500 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு உணவளிக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.


 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

சென்னை - செங்கல்பட்டு - அரக்கோணம் - சென்னை: நாட்டிலேயே மிக நீண்ட சுற்றுவட்ட ரயில் சேவை விரைவில் தொடக்கம்
விரலில் மை வைத்தபோது எதையோ சாதித்ததைப் போல் உணர்ந்தோம்
கள்ள ஓட்டு போட்டு சிக்கிய வாக்குச் சாவடி  முகவர்: அரை மணி நேரத்துக்கு மேல் வாக்குப் பதிவு நிறுத்தம் 
மக்களவைத் தேர்தல்: சென்னையில் பெண்கள் மட்டுமே பணியாற்றும் 38 வாக்குச்சாவடிகள்!
கால்நடை மருத்துவமனை ஊழியர் மீது தாக்குதல்: 2 பேர்  கைது