சென்னை அருகே 44 ஏக்கரில் புதிய பேருந்து நிலையம்: முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையத்துக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினார்.
அயப்பாக்கம் திட்டப் பகுதியில் கட்டப்பட்டுள்ள குறைந்த வருவாய் பிரிவு அடுக்குமாடிக் குடியிருப்புகளை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
அயப்பாக்கம் திட்டப் பகுதியில் கட்டப்பட்டுள்ள குறைந்த வருவாய் பிரிவு அடுக்குமாடிக் குடியிருப்புகளை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.


சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையத்துக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினார். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. 
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம், அயப்பாக்கத்தில் 336 குறைந்த வருவாய்ப் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இந்தக் குடியிருப்புகளை காணொலிக் காட்சி மூலமாக முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். 
இதேபோன்று, கொரட்டூர் திட்டப் பகுதியில் 222 குறைந்த வருவாய்ப் பிரிவு குடியிருப்புகளையும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் 90 வீடுகளையும் முதல்வர் திறந்து வைத்தார்.
இதேபோன்று, ஈரோடு மாநகரில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் கட்டப்பட்ட 448 அடுக்குமாடி குடியிருப்புகள், வேலூர் டோபிகானா பகுதியில் கட்டப்பட்ட 224 குடியிருப்புகளையும் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம்: கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. இதைக் கருத்தில் கொண்டு சென்னையை அடுத்த வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் 44.74 ஏக்கரில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்தப் பேருந்து நிலையத்துக்கு முதல்வர் பழனிசாமி வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினார்.
புதிய வசதிகள் என்ன? பேருந்து நிலையமானது, 6 லட்சத்து 40 ஆயிரம் சதுர அடி கொண்ட கட்டுமானத்துடன் அமைக்கப்பட உள்ளது. 250 பேருந்துகளை ஒரே நேரத்தில் நிறுத்துவதுடன், 270 கார்கள், 3,500 இருசக்கர வாகனங்களையும் நிறுத்திடலாம்.
இந்தப் பேருந்து நிலையத்தில் பெட்ரோல் நிரப்பு நிலையம், புறக்காவல் நிலையம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், துணைமின் நிலையம், தாய்ப்பாலூட்டும் அறை, முதலுதவி மையம், மருந்தகம், பயணிகளுக்கான காத்திருக்கும் அறை, பயணிகள் ஓய்வறை என பல்வேறு அம்சங்கள் இடம்பெறவுள்ளன.
இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் பா.பென்ஜமின், வீட்டு வசதி வாரியத் தலைவர் பி.கே.வைரமுத்து, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், வீட்டுவசதித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலாளர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com