திருநங்கைகளுக்கு சிறப்பு சிகிச்சை பிரிவு: சென்னை, மதுரை மருத்துவமனைகளில் தொடக்கம்

திருநங்கைகளுக்கென சிறப்பு சிகிச்சை பிரிவுகள் சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையிலும், மதுரை ராஜாஜி
திருநங்கைகளுக்கு சிறப்பு சிகிச்சை பிரிவு: சென்னை, மதுரை மருத்துவமனைகளில் தொடக்கம்


திருநங்கைகளுக்கென சிறப்பு சிகிச்சை பிரிவுகள் சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையிலும், மதுரை ராஜாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் தொடங்கப்பட்டுள்ளது. 
தற்போது காய்ச்சல், உடல் உபாதை போன்ற பொதுவானப் பிரச்னைகளுக்கு அப்பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. 
விரைவில் சிறுநீரகவியல், சருமம், மன நலம், தொற்றா நோய்கள் உள்பட அனைத்து விதமான பிரச்னைகளுக்கும் துறை சார்ந்த நிபுணர்களின் ஆலோசனையோடு திருநங்கைகளுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. 
சிறப்பு சிகிச்சை பிரிவுக்கான உள்கட்டமைப்பு பணிகள் அவ்விரு மருத்துவமனைகளிலும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்தப் பணிகள் நிறைவடைந்த பிறகு சிறப்புப் பிரிவு முழுவதுமாக பயன்பாட்டுக்கு வரும் என்று சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சமீபத்திய கணக்கெடுப்பின்படி, மாநிலம் முழுவதும் 5,500-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் உள்ளனர். பெரும்பாலும் பாலின மாற்று அறுவை சிகிச்சை மற்றும் ஒட்டுறுப்பு சிகிச்சைகளே அவர்களுடைய பிரதான தேவையாக உள்ளன. அந்த வகையில் சில ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சைகள் இலவசமாக அவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படுகின்றன.
இதைத் தவிர, வழக்கமான மருத்துவ சிகிச்சைகளும் அவர்களுக்கு அளிக்கப்படுகின்றன. அதேவேளையில், புற நோயாளிகள் சிகிச்சையைப் பொருத்தவரை ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி பிரிவுகள் இருப்பதுபோல அவர்களுக்கென எதுவும் இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில்தான், அக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் ராஜீவ் காந்தி மருத்துவமனை மற்றும் மதுரை அரசு பொது மருத்துவமனையில் புறநோயாளிகள் சிகிச்சையில் திருநங்கைகளுக்கு சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. ரூ.30 லட்சம் செலவில் அத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேசிய நல்வாழ்வு குழும அதிகாரிகள் கூறியதாவது:-
பொது இடங்களில் மற்றவர்களைப் போலவே மூன்றாம் பாலினத்தவருக்கு உரிய உரிமைகளும், வசதிகளும் கிடைப்பது அவசியம். அதேபோன்று அவர்களை பாகுபாடான கண்ணோட்டத்துடன் நடத்துவதைத் தடுப்பதும் முக்கியம். அதைக் கருத்தில் கொண்டு பல்வேறு சமூக நலத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வரிசையில்,  தற்போது திருநங்கைகளுக்கு சிறப்பு சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. அங்கு பாலியல் சார்ந்த பிரச்னைகள், ஹார்மோன் குறைபாடுகள், மனநல பிரச்னைகள் உள்ளிட்டவற்றுக்கான சிகிச்சைகள் அளிக்கப்பட உள்ளன.
அதுமட்டுமன்றி, திருநங்கைகளுக்குத் தேவையான மனநல ஆலோசனைகளும், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அதன்கீழ் வழங்கப்பட உள்ளன. இதற்காக தன்னார்வலர்கள் சிலர் பணியமர்த்தப்பட உள்ளனர். 
சென்னை, மதுரையைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக மேலும் 4 மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் இத்தகைய சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட உள்ளன என்று அவர்கள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com