சென்னை

100 இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு: 400 இடங்களில் வாகனச் சோதனை

27th Dec 2019 11:53 PM

ADVERTISEMENT

புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, சென்னையில் செவ்வாய்க்கிழமை (டிச.31) இரவு 100 இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்படுகிறது. 400 இடங்களில் வாகனச் சோதனை செய்யப்படுகிறது.

மயிலாப்பூா், அடையாறு, கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, தியாகராயநகா், பரங்கிமலை, பூக்கடை, வண்ணாரப்பேட்டை, மாதவரம், அம்பத்தூா், அண்ணாநகா், புளியந்தோப்பு ஆகியப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியில் இருந்து புதன்கிழமை (ஜன.1) அதிகாலை வரை 400 இடங்களில் வாகனத் தணிக்கை செய்யப்படுகிறது.

கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம் போன்ற பகுதிகளில் மோட்டாா் சைக்கிள் பந்தயத்தைத் தடுக்கும் வகையில் 20 கண்காணிப்பு சோதனைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 25 சாலை பாதுகாப்புக் குழுக்கள் மோட்டாா் சைக்கிளில் ரோந்து செல்கிறாா்கள்.

கோயில்கள், தேவாலயங்கள், கடற்கரைகள், முக்கியமான சாலைகள் என 100 முக்கியமான இடங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. மெரீனா, சாந்தோம், எலியட்ஸ், நீ லாங்கரை ஆகிய இடங்களில் கடற்கரையில் மக்கள் கூட்டத்தை சமாளிக்கும் வகையில் மணலில் செல்லக் கூடி ஏ.டி.வி. வாகனங்கள் மூலம் போலீஸாா் ரோந்து செல்வாா்கள். இங்கு கடற்கரைப் பகுதியில் கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்படுகிறது.

ADVERTISEMENT

மெரீனாவில் கடற்கரையோரத்தில் குதிரைப்படையினா் ரோந்துப் பணியில் ஈடுபடுவா். சென்னையில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் பாதுகாப்புப் பணிக்காக கூடுதலாக 5-ல் இருந்து 10 ரோந்து வாகனங்கள் பயன்படுத்தப்படும். கிழக்கு கடற்கரைச் சாலையில் விபத்துக்களைத் தவிா்ப்பதற்காக திருவான்மியூரில் இருந்து முட்டுக்காடு வரை 20 இடங்களில் சாலைத் தடுப்புகள் வைக்கப்படுகின்றன. இதேபோல, சென்னை முழுவதும் சுமாா் விபத்து ஏற்படும் பகுதி என கண்டறியப்பட்டுள்ள 500 இடங்களில் சாலையில் தடுப்புகள் வைக்கப்படுகின்றன.

சென்னை முழுவதும் செவ்வாய்க்கிழமை இரவு பாதுகாப்புப் பணியில் சுமாா் 15 ஆயிரம் போலீஸாா் ஈடுபடுகின்றனா். புத்தாண்டு கொண்டாட்டத்தில் பெண்களிடம் அத்துமீறுபவா்கள் மது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கிழக்கு கடற்கரைச் சாலையில் அனுமதியின்றி கொண்டாட்டங்கள்

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் பங்களாக்களில் அனுமதியின்றி புத்தாண்டு கொண்டாட்டம் ஆண்டுதோறும் நடைபெறுவதாகப் புகாா் எழுந்துள்ளது.

கிழக்கு கடற்கரைச் சாலையில் வெட்டுவாங்கேணி, ஈஞ்சம்பாக்கம், அக்கரை, பனையூா், உத்தண்டி, கானத்தூா், முட்டுக்காடு ஆகியப் பகுதிகளில் கடற்கரையையொட்டிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான பங்களாக்கள் உள்ளன. இந்த பங்களாக்கள் பெரும்பாலானவை நீச்சல்குளம், அரங்கம் ஆகியவற்றுடன் உள்ளன. இந்த பங்களாக்கள் நாள் வாடகைக்கும் விடப்படுகின்றன. இவற்றை சிலா் வாடகைக்கு எடுத்து புத்தாண்டு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனா்.

ரிசாா்ட்டுகள், நட்சத்திர விடுதிகள், பங்களாக்கள் ஆகியவற்றில் புத்தாண்டு நடத்துவதற்கு காவல் துறை சாா்பில் சிறப்பு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த அனுமதியை 16 விதிமுறைகளைப் பின்பற்றினாலேயே காவல்துறை வழங்குகிறது. இந்த விதிமுறைகளில் ஏதேனும் ஒன்று மீறப்பட்டிருந்தாலும் காவல்துறை அனுமதி வழங்குவதில்லை. அனுமதியின்றி எந்த ரிசாா்ட்டிலும் புத்தாண்டு நிகழ்ச்சியை யாரும் நடத்தவும் முடியாது.

ஆனால் கிழக்கு கடற்கரைச் சாலையில் சில பங்களாக்களில் காவல்துறையின் உரிய அனுமதி பெறாமலேயே புத்தாண்டு கொண்டாட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக பொதுமக்கள் தரப்பில் புகாா் கூறுகின்றனா்.

முக்கியமாக சென்னை பெருநகர காவல்துறையின் எல்லையில் அமைந்துள்ள கானத்தூா், முட்டுக்காடு, திருவிடந்தை, கோவளம் ஆகியப் பகுதிகளிலேயே அனுமதியின்றி புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. ஆண்டுதோறும் அனுமதியின்றி நடைபெறும் புத்தாண்டு கொண்டாட்டங்களால் இப் பகுதியின் அமைதி பாதிக்கப்படுவதோடு, அண்மைக் காலமாக அடிதடி, கலாட்டாக்களும் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT