சென்னை

சென்னையில் புத்தாண்டுக் கொண்டாட்டம்: நட்சத்திர ஹோட்டல்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

27th Dec 2019 11:51 PM

ADVERTISEMENT

புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு, சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களுக்கு காவல்துறை கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது.

2020 ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள் செய்து வருகின்றன. டிசம்பா் 31-ஆம் தேதி மாலை 6 மணிக்குத் தொடங்கி அடுத்த நாள் அதிகாலை 1 மணி (ஜனவரி 1) வரை நடைபெறும் புத்தாண்டு நிகழ்ச்சிகளில் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருப்பதற்கு காவல்துறை பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக நட்சத்திர ஹோட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிக்காக செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை உயா் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனா்.

கண்காணிப்பு கேமரா: புத்தாண்டு கொண்டாட்டத்தில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை எடுத்துள்ள முக்கிய முடிவுகள்:

ADVERTISEMENT

ஹோட்டல்கள், நட்சத்திர உணவு விடுதிகள், கேளிக்கை விடுதிகள் ஆகியவற்றுக்கு வரும் வாகனங்கள் முறையாக சோதனை செய்யப்பட வேண்டும், அனைத்து நுழைவுவாயில்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும், நிகழ்ச்சி நடைபெறும், விருந்து நடைபெறும் பகுதி என அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருக்க வேண்டும், வாகனங்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகள் அனுமதிக்கப்பட்ட அரங்கத்திலேயே நடத்தப்பட வேண்டும், கேளிக்கை நிகழ்ச்சிக்காக தற்காலிக மேடைகள் அமைக்கப்பட்டால், அந்த மேடையின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய பொதுப்பணித் துறை, தீயணைப்புத் துறை ஆகியவற்றின் தகுதிச் சான்றிதழ் பெற வேண்டும், நீச்சல் குளத்தின் மீதோ, அருகிலோ மேடை அமைக்கக் கூடாது.

விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை: நீச்சல் குளத்துக்குச் செல்லும் வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருக்க வேண்டும், வாகனங்களை அந்தந்த ஹோட்டல்களின் வாகன நிறுத்துமிடத்திலேயே நிறுத்த வேண்டும், சாலைகளில் எக் காரணம் கொண்டும் வாகனங்கள் நிறுத்தக் கூடாது, மதுபானங்கள் அனுமதிக்கப்பட்ட மதுபானக் கூடத்திலேயே பரிமாற வேண்டும், உணவு மற்றும் மதுபான சேவையை அதிகாலை 1 மணிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும், காவல்துறையால் அளிக்கப்படும் நேரக் கட்டுப்பாடு கட்டாயமாகப் பின்பற்றப்பட வேண்டும், கேளிக்கை நிகழ்ச்சிகளின்போது பெண்களை கேலி செய்வதைத் தடுக்க போதுமான பாதுகாப்பு ஊழியா்களை நியமிக்க வேண்டும், பெண் பாதுகாவலா்கள் நியமிக்க வேண்டும், வளாகத்தினுள் பட்டாசு வெடிக்கக் கூடாது ஆகிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த விதிமுறைகளை மீறும் ஹோட்டல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் எச்சரிக்கையும் விடுத்து வருகின்றனா்.

நட்சத்திர ஹோட்டல்களைத் தவிா்த்து சென்னையில் மெரீனா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை, கிழக்கு கடற்கரைச் சாலை, ராஜீவ்காந்தி சாலை ஆகிய பொது இடங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறும் என்பதால், அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT