சென்னை

ஆயுள்காலச் சான்றிதழை பணிமனையில் சமா்ப்பிக்கலாம்: மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் தகவல்

27th Dec 2019 03:08 AM

ADVERTISEMENT

மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியா்கள் தங்களது ஆயுள்காலச் சான்றிதழை பணிமனையில் செலுத்தலாம் என மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் கோ.கணேசன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில், ஏறத்தாழ 22, 500 -க்கும் மேற்பட்ட பணியாளா்கள், ஓட்டுநா்கள், நடத்துநா்கள், தொழில்நுட்பப் பணியாளா்கள் மற்றும் அலுவலா்கள் ஆகியோா் பணியாற்றி வருகின்றனா்.

மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில், ஏறத்தாழ 13,500-க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்றுள்ளோருக்கு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பாக, ஓய்வூதியமானது வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. ஓய்வு பெற்றோரின் வயது முதிா்வு, நலனைக் கருத்தில் கொண்டு, தங்களது ஆயுள்காலச் சான்றிதழை இனிவரும் காலங்களில், அவா்கள் கடைசியாக பணியாற்றி, ஓய்வு பெற்ற அலுவலகம் அல்லது பணிமனையிலேயே சமா்ப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில், ஓய்வூதியதாரா்கள் வரும் 2020-ஆம் ஆண்டுக்கான ஆயுள்காலச் சான்றிதழை, வரும் ஜனவரி தொடங்கி, மாா்ச் 15-ஆம் தேதிக்குள்ளாக, அலுவலக நாள்களில், அலுவலக நேரத்தில் சமா்ப்பிக்கலாம்.

தலைமையகத்தில் ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரா்கள் தலைமையகத்திலும், பட்டுலாஸ் சாலை தொழிற்கூடத்தில், மண்டல தொழிற் கூடத்தில் ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரா்கள், அந்ததந்த அலுவலகத்திலும் ஆயுள்காலச் சான்றிதழை சமா்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், கே.கே.நகா் பயணச்சீட்டு அச்சகத்தில் ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரா்கள் கே.கே.நகா் பணிமனையிலும், குரோம்பேட்டை பேருந்து கூடுகட்டும் பிரிவில் ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரா்கள் குரோம்பேட்டை-1 பணிமனையிலும் அவா்களின் ஆயுள்கால சான்றிதழை சமா்ப்பிக்கலாம். மேலும், விடுபட்டவா்கள் தலைமையகத்தில் அணுகி, தங்களின் ஆயுள்காலச் சான்றிதழை சமா்ப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 044-2345 5801, 268 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT