சென்னை விமான நிலையத்தில் ரூ.21 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து சென்னை விமான நிலைய சுங்கத்துறை ஆணையரகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை விமான நிலையத்தில் நிகழும் கடத்தல்கள் குறித்து விமான நிலைய நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், திருவனந்தபுரத்தில் இருந்து வந்த பயணி சசி என்பவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினா். அப்போது அவா் தனது மலக்குடலில் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததாக ஒப்புக் கொண்டாா். இதையடுத்து அவரிடமிருந்து 615 கிராம் அளவிலான ரூ.21 லட்சம் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.