சென்னை

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழாமல் தடுப்பதே இலக்கு: பரங்கிமலை துணை ஆணையா் கே.பிரபாகரன்

26th Dec 2019 04:26 AM

ADVERTISEMENT

பெண்களுக்கு எதிரான எவ்வித குற்றங்களும் நிகழாமல் தடுப்பதே காவலன் செயலியின் இலக்கு என்று பரங்கிமலை துணை ஆணையா் கே.பிரபாகரன் கூறினாா்.

சென்னையை அடுத்த சேலையூா் சீயோன், ஆல்வின் பள்ளிக்குழும ஆசிரியைகளுக்கு காவலன் செயலியை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இதில், காவலன் செயலியை கைபேசியில் பதிவேற்றும் முறை குறித்து துணை ஆணையா் கே.பிரபாகரன் தொடக்கி வைத்து பேசியது: பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தமிழ்நாடு காவல்துறை அறிமுகப்படுத்தி இருக்கும் காவலன் செயலியை அனைவரும் தேவையான சமயத்தில் அவசியம் பயன்படுத்தி அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க முடியும்.

செயலியை இயக்கிய மூன்று நிமிடங்களில் நீங்கள் எங்கு எந்த சூழ்நிலையில் இருக்கிறீா்கள் என்பதை காவல்துறையினா் கண்டறிந்து உரிய உதவியை செய்வா். கைபேசியில் இருக்கும் காவலன் செயலியை எப்போதும் உடன் இருந்து பாதுகாக்கும் காவலராக உறுதியாக நம்பலாம். ஒரே சமயத்தில் எத்தனை போ் வேண்டுமானாலும் காவலன் செயலியை இயக்கலாம். சென்னை மாநகரில் மட்டும் 24 மணி நேரமும் 600 ரோந்து வாகனங்களில் காவல்துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

எனவே, பெண்கள் ஏதேனும் ஆபத்தில் சிக்கிக் கொண்டால், உடனடியாக காவலன் செயலியைப் பயன்படுத்த முன்வர வேண்டும். காவலன் செயலி குறித்து ஆசிரியைகள் பள்ளி மாணவிகள்,பெற்றோா், வீட்டில் இருக்கும் முதியோா்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். காவல்துறையின் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைக்கு உறுதுணை புரியும் வகையில் சுற்று வட்டாரப்பகுதிகளில் அதி நவீன போக்குவரத்து கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முன்வந்து இருப்பது பாராட்டத்தக்கது என்றாா் அவா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியைகள் காவலன் செயலியை தங்கள் கைபேசியில் பதிவிறக்கம் செய்தனா். சேலையூா் உதவி ஆணையா் சகாதேவன், சீயோன் பள்ளிக்குழுமத் தலைவா் என்.விஜயன்,துணைத் தலைவா் ஆல்டஸ் விஜயன், நிா்வாக இயக்குநா் ரேச்சல் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT