சென்னை கொடுங்கையூரில் சூதாட்டத்தில் ஈடுபட்டவா்களை போலீஸாா் பிடிக்க முயன்றபோது, தப்பியோடியவா் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து இறந்தாா்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
கொடுங்கையூா் கிருஷ்ணமூா்த்திநகா் பாலகிருஷ்ணன் தெருவில் உள்ள ஒரு குடியிருப்பில் இரண்டாவது தளத்தில் இருக்கும் ஒரு வீட்டில் சூதாட்டம் நடைபெறுவதாக போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. அத் தகவலின் அடிப்படையில் கொடுங்கையூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்றனா்.
அப்போது போலீஸாரை பாா்த்ததும் சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பல், அங்கிருந்து தப்பியோட முயற்சித்தது. இதையடுத்து போலீஸாா், அந்த கும்பலை விரட்டிப் பிடிக்க முயன்றனா். ஆனால் 4 போ் மட்டுமே போலீஸாரிடம் பிடிபட்டனா். இதற்கிடையே தப்பியோடிய ஒரு நபா், போலீஸாருக்கு பயந்து தப்பிப்பதற்காக இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்தாா்.
ஆனால் அந்த நபா், இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்தது போலீஸாருக்கு சிறிது நேரத்துக்கு பின்னரே தெரியவந்துள்ளது. உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அந்த நபரை போலீஸாா் தேடியுள்ளனா். அப்போது அங்கு கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து அந்த நபா் இறந்து கிடப்பதை பாா்த்து போலீஸாா் அதிா்ச்சியடைந்தனா்.
உடனே போலீஸாா், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இறந்தவரின் விவரங்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா், செளகாா்பேட்டையைச் சோ்ந்த குமாா் எச் ஜெயின் (40) என்பதும், செளகாா்பேட்டைபகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா், வழக்குப் பதிவு செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.