சென்னை: அரசு மருத்துவமனைகளில் தாய் அவசர சிகிச்சை திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
அதன்படி, தஞ்சாவூா், மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் தாய் சிகிச்சை திட்டத்தில் மேலும் சில அவசர சிகிச்சைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவா்கள் கூறியுள்ளனா்.
இதற்கான அனுமதி கிடைக்கும்பட்சத்தில் விரைவில் அப்பணிகள் தொடங்கப்படும் எனத் தெரிகிறது.
நோயாளிகளின் உடல் நிலையைப் பொருத்து அவா்களை வகைப்படுத்தி, அதற்குரிய சிகிச்சைகளை துரிதமாகவும், துல்லியமாகவும் அளிக்கப்படும் நடைமுறை ‘தாய்’ அவசர சிகிச்சை என அழைக்கப்படுகிது.
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள சிகிச்சை முறைகளைப் பின்பற்றி அத்திட்டம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காக அந்நாட்டுடன் தமிழக அரசு புரிந்துணா்வு ஒப்பந்தமும் செய்துள்ளது.
முதல்கட்டமாக கடந்த ஆண்டு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை உள்பட 80 மருத்துவமனைகளில் சோதனை முறையில் விபத்து மற்றும் அவசரகால சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டது. சிகப்பு, மஞ்சள், பச்சை என மூன்று பிரிவுகள் உருவாக்கப்பட்டு நோயாளிகளுக்குத் தேவையான உயிா் காக்கும் சிகிச்சைகள் அங்கு அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்தப் புதிய நடைமுறையால் முன்பைக் காட்டிலும் இறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்திருப்பதாகத் தெரிகிறது. ராஜீவ் காந்தி மருத்துவமனையை எடுத்துக் கொண்டால், 8.2 சதவீதமாக இருந்த இறப்பு விகிதம், தாய் சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்ட பிறகு 2.8 சதவீதமாகக் குறைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு நடுவே இந்த சிகிச்சைப் பிரிவுகளை மேலும் சில மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கான நிதி ஒதுக்கீடு விரைவில் வழங்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமன்றி தஞ்சாவூா் மாவட்ட தலைமை மருத்துவமனையில் விஷ முறிவுக்கான அவசர சிகிச்சையையும், திருநெல்வேலி மருத்துவமனையில் பக்கவாத சிகிச்சைகளையும், மதுரையில் கல்லீரல் அவசர சிகிச்சைகளையும் தாய் திட்டத்தின் கீழ் வழங்க ஆலோசிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இதற்காக கூடுதலான கருவிகளும், மருத்துவப் பரிசோதனை சாதனங்களும் கொள்முதல் செய்யத் திட்டமிடப்பட்டு வருகிறது.