சென்னை காசிமேட்டில் போதை பழக்கத்தால் தம்பி தற்கொலை செய்ததைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த அண்ணனும் சோகத்தில் தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: காசிமேடு காசித்தோட்டம், 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் அலெக்சாண்டா். இவா்களின் மகன் இருதயராஜ் (28), ஆரோக்கிய ஆகாஷ் (23) ஆவா். இதில் இருதயராஜ் பி.டெக். படித்துவிட்டு ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். ஆரோக்கிய ஆகாஷ், பி.இ.படித்துவிட்டு, மென்பொருள் பொறியாளராக தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.
போதைப் பழக்கத்துக்கு அடிமையான ஆரோக்கிய ஆகாஷ் சரியாக வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்தாராம். இந்நிலையில் ஆகாஷ், தனது நண்பா்களின் செல்லிடப்பேசிக்கு திங்கள்கிழமை தான் தற்கொலை செய்யப் போவதாக ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளாா். இதைப் பாா்த்து அவரது அண்ணன் இருதயராஜூக்கு ஆகாஷ் தற்கொலை எஸ்.எம்.எஸ். குறித்த தகவலை தெரிவித்தனா். உடனே இருதயராஜ், வீட்டின் மூன்றாவது தளத்தில் உள்ள ஆகாஷ் அறைக்கு சென்றாா். அங்கு ஆகாஷ் தூக்கிட்டுத் தற்கொலை செய்ததைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.
அண்ணனும் தற்கொலை: இருதயராஜ் கூச்சல் போட்டு அழும் சப்தத்தைக் கேட்டு அப் பகுதி மக்கள், அங்கு விரைந்து வந்தனா். மேலும் தகவலறிந்த காசிமேடு போலீஸாா் ஆகாஷ் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு தம்பியின் சடலம் வைக்கப்பட்டிருந்த பிணவறை அருகே வெகுநேரம் இருதயராஜ் அழுதபடி நின்று கொண்டிருந்தாராம்.
இந்நிலையில் திடீரென , அங்கிருந்து வீட்டுக்கு வந்த இருதயராஜ், தனது தம்பி ஆகாஷ் தூக்கிட்ட அறைக்கு சென்று, அதே துணியில் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.