சென்னை பெசன்ட் நகர் கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களுக்கு போலீஸார் ஞாயிறு மாலையில் அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி, நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் தீவிரமடைந்து வன்முறை சம்பவங்களும் நடைபெறுகின்றன. அதனைத் தடுக்க பல்வேறு இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இதற்கு எதிராக போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன.
இந்தநிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி அளவில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் கூடி நமது எதிர்ப்பைப் பதிவு செய்வோம் என்று "சமூக வலைதள நண்பர்கள்' என்ற பெயரில் கடந்த சில நாள்களாக தகவல் பரவி வந்தது. இதையடுத்து, சென்னை பெசன்ட் நகர் கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களுக்கு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் அனுமதி மறுத்தனர். இதையடுத்து ,பெசன்ட் நகர் கடற்கரைக்குச் செல்லும் வழிகள் அனைத்தும் போலீஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இதனால் விடுமுறைய கொண்டாடுவதற்காக குடும்பத்துடன் கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதற்கிடையே குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி, சமூக வலைதளங்கள் மூலமாக ஒருங்கிணைந்த 100-க்கும் மேற்பட்டோர், பெசன்ட்நகர் பேருந்து பணிமனை அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஏற்கெனவே, கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரியில் மெரீனா கடற்கரையில் திடீரென ஜல்லிக்கட்டுக்கு ஒன்று கூடிய லட்சக்கணக்கான இளைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை கருத்தில் கொண்டு போராட்டம் குறித்த தகவலால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெசன்ட் நகர் கடற்கரைக்கு செல்வதற்கு போலீஸார் தடை விதித்தனர்.