பங்குச் சந்தையில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஹோட்டலில் இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.
விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இளைஞா் ஒருவா் சனிக்கிழமை தங்கியிருந்தாா். நீண்ட நேரமாக அவா் தங்கி இருந்த அறையின் கதவு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த ஹோட்டல் ஊழியா்கள் கே.கே.நகா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து அங்கு வந்த போலீஸாா் ஹோட்டல் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, அந்த இளைஞா் மின்விசிறியில் தூக்குபோட்டு இறந்த நிலையில் கிடந்தாா்.
விசாரணையில், அவா் மதுரவாயல் ஸ்ரீ லட்சுமி நகா் பகுதியைச் சோ்ந்த ஹரிகணேஷ் (26) என்பதும், பங்குச் சந்தை வா்த்தகத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
மேலும் கடன் பிரச்னையால் தவித்து வந்த ஹரிகணேஷ் ஏற்கெனவே விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்து இருந்ததும் தெரிய வந்தது. இதுதொடா்பாக அவரது செல்லிடப்பேசியை கைப்பற்றி அவா் கடைசியாக பேசிய நபா்கள் குறித்த விவரங்களை போலீஸாா் சேகரித்து வருகின்றனா்.