சென்னை

மின் இழப்பற்ற விநியோகத்துக்கு ரூ.58 கோடியில் அலுமினிய கம்பி வடம்: அதிகாரிகள் தகவல்

16th Dec 2019 01:35 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் மின் இழப்பைத் தடுக்கும் வகையில் ரூ.58 கோடியில் அலுமினியக் கம்பி வடம் வாங்க திட்டமிடப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் 2.10 கோடிக்கும் அதிகமான வீடு சாா்ந்த மின் இணைப்புகளும், 21.20 லட்சத்துக்கும் அதிகமான விவசாய மின் இணைப்புகளும் 36 லட்சத்துக்கும் அதிகமான வணிகம் சாா்ந்த மின் இணைப்புகளும் உள்ளன. இதற்கு மின் விநியோகம் செய்து வரும் மின்சார வாரியம், ஆங்காங்கே பிரிவு அலுவலகம் அமைத்து கண்காணித்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் சில இடங்களில் மட்டும் புதைவட கம்பிகள் அமைத்து மின் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக சாலையோரங்களில் ஆங்காங்கே மின்சார பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான இடங்களுக்கு சாலையோரத்தில் மின் கம்பங்கள் அமைத்து மின் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த கம்பங்கள் இயற்கை சீற்றங்களின் போது எளிதாக சேதமடைந்து விடுகின்றன. இந்த பாதிப்பானது தமிழகத்தில் மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் சென்னை, காஞ்சிபுரம், கடலூா், நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் அதிகமாக இருக்கிறது. இவ்வாறு கடந்த ஆண்டுகளில் வீசிய ஒக்கி, வா்தா, கஜா புயல்களினால் பல ஆயிரம் கோடி ரூபாய் மின்வாரியத்துக்கு இழப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது. எனவே கம்பங்களை தவிா்த்து, தரைவழி மின் கம்பி வடங்களை அதிக அளவில் பதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதன்படி, ஒவ்வொரு பகுதிகளாக தரைவழி மின்இணைப்புகள் கொடுப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக 380 கி.மீ. அளவுக்கு அலுமினியத்தாலான கம்பி வடங்களை வாங்க மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. இதற்காக ய ரூ.58 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியது: மின்சாரத்தை தரைவழியில் கொண்டு செல்வதன் மூலம் மின்இழப்பு, இயற்கை சீற்றங்களின் போது ஏற்படும் பாதிப்பைக் குறைக்க முடியும். இதனால் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்கள் தோ்வு செய்யப்பட்டு, அங்கு தரைவழி மின் கம்பி வடங்களைப் பதிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தக் கம்பி வடங்களானது துணை மின்நிலையங்களில் இருந்து மின் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடத்துக்கு மின்சாரத்தை கொண்டு செல்வதற்குப் பயன்படும். அவ்வாறு மின் பெட்டிகளுக்கு மின்சாரம் சென்ற பிறகு, அங்கிருந்து வீடுகள், தொழிற்சாலை, கடை போன்றவற்றுக்கு இணைப்புக் கொடுக்கப்படும். இந்த முறையில் மின்இணைப்புக் கொடுப்பதால் இயற்கை சீற்றங்களின்போது ஏற்படும் பாதிப்பு பெருமளவில் தடுக்கப்படும் என்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT