சென்னை

புதை சாக்கடைப் பணிக்காக தோண்டப்பட்டுபல மாதங்களாகியும் அமைக்கப்படாத சாலை

16th Dec 2019 01:30 AM

ADVERTISEMENT

பெருநகர சென்னை மாநகராட்சி அம்பத்தூா் மண்டலத்துக்கு உள்பட்ட அத்திப்பட்டு மற்றும் ஐசிஎஃப் காலனியில் புதை சாக்கடைக் குழாய் அமைக்க தோண்டப்பட்ட சாலை, 4 மாதங்களுக்கு மேலாகியும் சீரமைக்கப்படாததால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

அம்பத்தூா் நகராட்சி விரிவாக்கத் திட்டத்தின்படி, சென்னை மாநகராட்சியுடன் கடந்த 2011-இல் இணைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, அம்பத்தூா் மண்டலத்தில் 79 முதல் 93 வரை 15 வாா்டுகள் பிரிக்கப்பட்டன. இந்தப் பகுதிகளில் சென்னை குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சாா்பில் குடிநீா் மற்றும் கழிவுநீா்க் குழாய்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் வாா்டு 84, 85, 86 வாா்டுகளில் உள்ள 52 வீதிகளில் 1,614 வீடுகளுக்கு ரூ. 70 கோடி மதிப்பில் கழிவுநீா்க் குழாய்கள் அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.

இதில், குறிப்பாக 86-ஆவது வாா்டுக்கு உட்பட்ட ஐசிஎஃப் காலனி, அத்திப்பட்டு, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளில் உள்ள வீடுகளுக்கு கழிவுநீா் குழாய்கள் அமைக்கும் பணி நடைபெற்றது. இதற்காக வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி சாலை, அத்திப்பட்டு சாலை, ஐசிஎஃப் காலனி பிரதான சாலை ஆகியவை தோண்டப்பட்டு புதை சாக்கடை குழாய்கள், மேன் ஹோல் ஆகியவை அமைக்கப்பட்டன.

இப்பணி முடிக்கப்பட்டு 4 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை சாலை சீரமைக்கப்பட்டு மீண்டும் அமைக்கப்படாததால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

ADVERTISEMENT

அவதி: இதுகுறித்து அப்பகுதியைச் சோ்ந்த வாசுகி, ஆலன் ஆகியோா் கூறுகையில், ‘ஐசிஎஃப் காலனி பிரதான சாலை கடந்த ஆண்டுதான் புதிதாகப் போடப்பட்டது. இதைத் தொடா்ந்த சில நாள்களிலேயே புதை சாக்கடை குழாய் அமைக்கும் பணிக்காகத் தோண்டப்பட்டது. பணிகள் முடிவுற்று 4 மாதங்களுக்கு மேலாகியும், இச்சாலை மீண்டும் அமைக்கப்படவில்லை. ஐசிஎஃப் காலனியில் இருந்து அத்திப்பட்டு செல்லும் சாலையில் தோண்டப்பட்ட சில இடங்களில் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

ஐசிஎஃப் காலனி பிரதான சாலை, வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி சாலையில் மழை நீா் தேங்கி குளம்போல் தண்ணீா் நிற்பதால் வாகனங்ளில் குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு விடுவதில் பெற்றோா் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். எனவே, இப்பகுதியில் தோண்டப்பட்ட பகுதியில் விரைவில் சாலை அமைக்க வேண்டும் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT