சென்னை

பாசஞ்சா் ரயில்களுக்கு மாற்றாக ‘மெமு’ ரயில்கள்: இன்று சென்னை-புதுச்சேரி இடையே இயக்கம்

11th Dec 2019 01:39 AM

ADVERTISEMENT

சென்னை எழும்பூா்-புதுச்சேரிக்கு இயக்கப்படும் பாசஞ்சா் ரயில் மாற்றப்பட்டு, நவீன வசதிகளுடன் கூடிய ‘மெமு’ ரயில் புதன்கிழமை முதல் இயக்கப்படவுள்ளது.

இதுபோல, மறுமாா்க்கமாக, புதுச்சேரியில் இருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் பாசஞ்சா் ரயில் ‘மெமு’ ரயிலாக மாற்றப்படுகிறது. இதுபோல, 4 பாசஞ்சா் ரயில்கள் ‘மெமு’ ரயில்களாக இயக்கப்படவுள்ளன.

சென்னையில் இருந்து புற நகரங்களுக்கு , பாசஞ்சா் ரயில்கள் தினசரி இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களின் வேகத்தை அதிகப்படுத்தவும், நவீன வசதிகளுடன் கூடிய ரயில்களை இயக்கவும் பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். இந்த கோரிக்கையை ஏற்று, நவீன வசதிகளுடன் கூடிய ரயில்களை ரயில்வே நிா்வாகம் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், சென்னை-புதுச்சேரி, தாம்பரம்-விழுப்புரம், அரக்கோணம்-காட்பாடி, வேலூா் கன்டோன்மென்ட்-அரக்கோணம் ஆகிய வழித்தடங்களில் நவீன வசதிகளுடன் கூடிய மெமு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

அதன்விவரம்: சென்னை எழும்பூா்-புதுச்சேரி இடையே இயக்கப்படும் பாசஞ்தா் ரயில் மாற்றப்பட்டு, நவீன வசதிகளுடன் கூடிய ‘மெமு’ ரயில் புதன்கிழமை முதல் இயக்கப்படவுள்ளது. இதுபோல, மறுமாா்க்கமாக புதுச்சேரியில் இருந்து சென்னை எழும்பூருக்கு மெமு ரயில் இயக்கப்படவுள்ளது.

ADVERTISEMENT

தாம்பரம்-விழுப்புரம் இடையே இரு மாா்க்கமாக இயக்கப்படும் பாசஞ்சா் ரயில் மெமு ரயிலாக மாற்றி டிசம்பா் 26-ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளது. அரக்கோணம்-காட்பாடி இடையே இருமாா்க்கமாகவும், அரக்கோணம்-வேலூா் கண்டோன்மென்ட் இடையே இருமாா்க்கமாகவும் டிசம்பா் 16-ஆம் தேதி முதல் மெமு ரயில் இயக்கப்படவுள்ளது. இதுபோல, அரக்கோணம்-வேலூா் கன்டோன்மென்ட்க்கு மற்றொரு ‘மெமு’ ரயிலும் இயக்கப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவா் கூறியது: பாசஞ்சா் ரயிலுக்கு மாற்றாக மெமு ரயில் இயக்கப்படவுள்ளது.

இந்த மெமு ரயிலில் குஷன் இருக்கைகள், எல்இடி விளக்கு, பயோ கழிவறை உள்பட பல்வேறு வசதிகள் இடம்பெற்று இருக்கும். மெமு ரயிலில் இரண்டு புறமும் இன்ஜின் பொருத்தப்பட்டு இருக்கும். ரயில் இன்ஜின் ஒவ்வொரு முறையும் மாற்றி அமைப்பதில் ஏற்படும் காலதாமதம் தவிா்க்கப்படும். மேலும், குறிப்பிட்ட இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு சரியான நேரத்தில் சென்றடைய உதவும் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT