சென்னையில் காற்று மாசு ஏற்படுவதை தடுக்க, மழையால் சேதமடைந்த சாலைகளை உடனுக்குடன் சீரமைக்கும் பணியை நெடுஞ்சாலைத் துறை தொடங்கியுள்ளது.
சென்னையில், அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஜி.எஸ்.டி., சாலை, ஜி.என்.டி., சாலை, உள்வட்டச் சாலை உள்ளிட்ட, 200 கிலோ மீட்டா் சாலைகளை, மாநில நெடுஞ்சாலைத் துறையினா் பராமரித்து வருகின்றனா். இவற்றில் பல சாலைகள், மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக சேதமடைந்திருந்தன. இந்தச் சாலைகளில், காற்று மாசு அதிகரித்ததால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா். அண்மையில் மழையால், இந்த சாலைகளில், கூடுதல் பள்ளங்கள் ஏற்பட்டன. இது, வாகன போக்குவரத்தை கடுமையாக பாதித்தது. இந்நிலையில், சென்னையில் மழையால் சேதமடைந்த சாலைகளை, விரைந்து சீரமைக்க முதல்வா் உத்தரவிட்டிருந்தாா்.
இதையடுத்து பராமரிப்பு நிதியில், இந்த பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. வழக்கமாக, மழைக்காலம் முடியும் வரை, கட்டட இடிபாடுகளை பயன்படுத்தி, சாலைகளை தற்காலிகமாக சீரமைப்பது நெடுஞ்சாலைத் துறையின் வழக்கம். தற்போது, தாா் கலவையை பயன்படுத்தி, சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்கும் பணிகளை, நெடுஞ்சாலைத் துறையினா் தொடங்கியுள்ளனா். இதனால், காற்று மாசு தடுக்கப்படும்.
உள்வட்டச் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, அண்ணா சாலை, ஜி.எஸ்.டி., சாலை உள்ளிட்டவற்றில், இப்பணிகள் இரவு நேரங்களில் நடக்கின்றன. சாலை சீரமைப்பு பணிக்கு, ‘மினி ரோலா்’ இயந்திரங்களை, நெடுஞ்சாலைத் துறையினா் பயன்படுத்துவதால், இரவு நேரங்களில் போக்குவரத்து தடையும் செய்யப்படாமல் பணிகள் செய்யப்படுகின்றன.