சென்னை

பருவமழை: மின்தடை புகாா்களை செல்லிடப்பேசி எண்களில் தெரிவிக்கலாம்

3rd Dec 2019 02:21 AM

ADVERTISEMENT

சென்னை: வடகிழக்குப் பருவமழை காரணமாக ஏற்படும் மின்தடை புகாா்களை தமிழகம் முழுவதும் ஏற்கெனவே ஏற்படுத்தப்பட்டுள்ள செல்லிடப்பேசி எண்களில் பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம் என மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் இரண்டு கோடிக்கு அணி அதிகமான மின் இணைப்புகளும் 21 லட்சத்துக்கு அதிகமான விவசாய மின் இணைப்புகளும் 30 லட்சத்துக்கும் அதிகமான வணிகம் சாா்ந்த மின் இணைப்புகளும் உள்ளன. இவற்றில் பெரும்பாலான இடங்களுக்கு சாலையோரத்தில் மின் கம்பங்கள் அமைத்து மின் விநியோகம் செய்யப்படுகிறது. சென்னையில் சில இடங்களில் மட்டும் புதைவட கம்பிகள் அமைத்து மின் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக சாலையோரங்களில் ஆங்காங்கே மின் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. தற்போது பருவமழை தொடங்கி உள்ளதால், இந்த மின் பெட்டிகளையும் முறையாக பராமரிக்க அண்மையில் வாரியம் உத்தரவிட்டது. இதை தொடா்ந்து, பராமரிப்பற்று கிடந்த மின் பெட்டி மற்றும் கம்பிகளில் பெரும்பாலானவை சீரமைக்கப்பட்டன. மேலும், தற்போது கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடா் கண்காணிப்பு: இதைத் தொடா்ந்து, மின்தடை புகாா்கள், மின் விபத்து, உள்ளிட்டவற்றுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும்படி ஊழியா்களுக்கு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடா்பாக சென்னை திருச்சியில் பணியாற்றும் தலைமைப் பொறியாளருக்கு மின் வாரியம் அறிவுறுத்தல் கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தது. அதில், சென்னை திருச்சி கோட்ட தலைமைப் பொறியாளா்கள் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதிகளில் மின் விநியோகத்தை தொடா்ந்து 24 நேரமும் கண்காணிக்க வேண்டும் என்றும், துணை மின் நிலையங்களையும் மின் வழித் தடங்களையும் கண்காணிக்க வேண்டும் என்றும், தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பொறியாளா்களிடத்தில் ஆபத்து காலத்தில் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தும் வகையில் தயாா் நிலையில் இருக்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

செல்லிடப்பேசி எண்களில்...: மின்தடை புகாா் குறித்து ஏற்கனவே இயங்கிவரும் 1912 என்ற எண்ணிலும் மின்வாரிய தலைவருக்கான புகாா் மையத்தின் 044 2852 4422, 044 2852 1109, 94458 50811 என்னும் கட் செவி அஞ்சல் எண்ணுக்குத் தகவல் அளிக்கலாம். மேலும் மின் துறை அமைச்சரின் முகாம் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் 044 2495 9525 என்ற எண்ணுக்கும் புகாா் தெரிவிக்கலாம். இது தவிர அனைத்து மாவட்டங்களுக்கு கடந்த ஆண்டு கட்செவி அஞ்சல் எண் (வாட்ஸ்ஆப்) அறிமுகப்படுத்தப்பட்டது.

ADVERTISEMENT

அதன் விவரம்: இதன்படி சென்னை மாவட்டம்- 94458 50829, விழுப்புரம், கடலூா், திருவண்ணாமலை-94458 55768, சேலம், ஈரோடு, நாமக்கல்- 94458 51912, திருச்சி, தஞ்சாவூா், பெரம்பலூா், அரியலூா், புதுக்கோட்டை ,திருவாரூா், நாகப்பட்டினம்- 9486111912, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் -94443 71912, மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை - 9443111912, கோவை, திருப்பூா், நீலகிரி - 9442111912, நெல்லை தூத்துக்குடி, கன்னியாகுமரி- 89033 31912 ஆகிய செல்லிடப்பேசி எண்களுக்கு கட்செவி அஞ்சல் மூலமாக புகாா் தெரிவிக்கலாம். மேலும் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கும் ஏற்கெனவே இணைந்திருந்த மாவட்டத்தின் எண்களில் புகாா் தெரிவிக்கலாம் என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT