சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கட்டுமானத் தொழில் அகாதெமி சார்பில் கட்டுமானத் துறையில் நீர் மேலாண்மையின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் வெள்ளிக்கிழமை (ஆக. 30) பயிலரங்கம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து கட்டுமானத் தொழில் அகாதெமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: நீர் ஆதாரங்கள் அழிப்பு, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அண்மைக்காலமாக தண்ணீர்ப் பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்நிலையில், கட்டுமானத் துறையில் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்து கட்டடப் பொறியாளர்கள், கட்டுமானர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கட்டுமானத் தொழில் அகாதெமி, தினமணி, ஜெயராஜ் நிறுவனம், பாரதி சிமென்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் கட்டுமானத் துறையில் நீர் மேலாண்மையின் முக்கியத்துவம் என்ற தலைப்பில், சென்னை கிண்டி, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அலுமினி அரங்கில் வெள்ளிக்கிழமை (ஆக. 30) காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை
பயிலரங்கம் நடைபெற உள்ளது. இந்தப் பயிலரங்கில், எல் அண்ட் டி நிறுவனத்தின் ஆராய்ச்சி, விரிவாக்கத் துறைத் தலைவர் சிவராம சர்மா, சென்னை ஐஐடியின் கௌரவப் பேராசிரியர் ஏ.ஆர்.சாந்தகுமார் ஆகியோர் கலந்துகொண்டு நீர் மேலாண்மை குறித்து சிறப்புரையாற்றுகின்றனர். இதில், கலந்து கொள்ள விரும்புவோர் constructionacademysouth@gmail.com அல்லது 93833 63663, 81246 20467 என்ற செல்லிடப்பேசி எண்களில் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.