சென்னை பல்லாவரம் ராணுவ குடியிருப்பில் பணியில் இருந்த ராணுவ வீரர் தனது உயரதிகாரியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை பல்லாவரம் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள ராணுவ முகாமில் இந்திய ராணுவத்தின் 17-வது படைப் பிரிவில் பணியாற்றும் ராணுவ அதிகாரிகள், வீரர்கள் வசித்து வருகின்றனர். இங்கு ராணுவ முகாமில் பஞ்சாபைச் சேர்ந்த ராணுவ வீரர் ஜெக்ஷீர் சிங் (21) உள்பட ராணுவ வீரர்கள் வழக்கம்போல் பாதுகாப்புப் பணியில் இருந்தனர்.
இதே படைப் பிரிவில் உத்தரகண்ட்டைச் சேர்ந்த பிரவீன்குமார் ஜோஷி (38) ராணுவ உயர் அதிகாரியாகப் பணியாற்றி வந்தார்
திங்கள்கிழமை இரவு ராணுவ முகாமில் பணியில் இருந்த ராணுவ வீரர்களை கண்காணிக்கும் பணியை பிரவீன் குமார் ஜோஷி மேற்கொண்டார். அப்போது, ஜெக்ஷீர் சிங் தனது பணியை நள்ளிரவில் ஒழுங்காக செய்யாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்ட பிரவீன்குமார் அதிகாலை 3 மணி அளவில் ராணுவ வீரர் ஜெக்ஷீர் சிங்குக்கு ராணுவ வழக்கப்படி பயிற்சி டிரில் தண்டனை வழங்கியுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த ஜெக்ஷீர் சிங், ஹவில்தார் பிரவீன்குமார் ஜோஷியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றி, ஜெக்ஷீர்சிங் கையில் இருந்த இயந்திர துப்பாக்கியால் பிரவீன் குமார் ஜோஷியை சுட்டார். பின்னர் தானும் துப்பாக்கியால் சுட்டு கொண்டார். இதில் இருவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். இது குறித்து பல்லாவரம் காவல் நிலையத்தில் ராணுவ முகாம் மேஜர் உல்லாஸ் குமார் புகார் செய்தார். போலீஸ் உயர் அதிகாரிகள் ராணுவ முகாமுக்குச் சென்று விசாரணை நடத்தினர். உயிரிழந்த இருவரின் சடலங்களையும் தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். பின்னர் இருவரது உடல்களும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.