ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கதவுகளின்றி கழிப்பறைகள்: நோயாளிகள், பொதுமக்கள் அவதி

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள கழிப்பறைகளில் கதவுகள் சேதமடைந்து தனியாக கழற்றி வைக்கப்பட்டிருப்பதால் நோயாளிகளும், பொது மக்களும் கடும்
சேதமடைந்த கதவால் திறந்த நிலையில் உள்ள கழிப்பறை.
சேதமடைந்த கதவால் திறந்த நிலையில் உள்ள கழிப்பறை.


சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள கழிப்பறைகளில் கதவுகள் சேதமடைந்து தனியாக கழற்றி வைக்கப்பட்டிருப்பதால் நோயாளிகளும், பொது மக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் பல முறை புகார் அளித்தும், இதுவரை அந்தக் குறைகள் நிவர்த்தி செய்யப்படவில்லை என்று வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
355 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு நாளொன்றுக்கு 15 ஆயிரம் பேர் புறநோயாளிகளாகவும், 3,500 பேர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நோயாளிகள் மற்றும் உடன் இருப்பவர்களின் பயன்பாட்டுக்காக மொத்தம் 1,020 கழிப்பறைகள் அங்கு உள்ளன. அவற்றில் பல கழிப்பறைகள் உரிய பராமரிப்பின்றி பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாகத் தெரிகிறது.
சில கழிப்பறைகளில் கதவுகள் முழுமையாக சேதமடைந்தும், தனியாக கழற்றி வைக்கப்பட்டும் உள்ளன. குறிப்பாக, நான்காம் தளத்தில் உள்ள நரம்பியல் துறையில் உள்நோயாளிகள் பிரிவுக்கான அனைத்து கழிப்பறைகளிலும் கதவுகள் இல்லை.
அதன் காரணமாக அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளும், அவர்களுடன் இருப்பவர்களும் இயற்கை உபாதைகளைக் கழிக்க வெளியே செல்ல வேண்டிய சூழல் நிலவுகிறது. பயன்பாட்டில் இருக்கும் ஒரு சில கழிப்பறைகளிலும்கூட சரிவர தண்ணீர் வருவதில்லை எனக் கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கழிப்பறைகள் மூடப்பட்டதாகப் புகார் எழுந்தது. ஆனால், அதனை மருத்துவமனை நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்தது. மேலும், அனைத்து கழிப்பறைகளையும் முறையாகப் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் விளக்கமளித்தது.
ஆனால், தற்போது மீண்டும் அத்தகைய குற்றச்சாட்டுகள் எழுந்திருப்பது ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பராமரிப்புப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லையோ? என்ற கேள்விக்கு இடமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இதனிடையே, மருத்துவர்கள் வாகனம் நிறுத்தும் இடத்திலும் கழிவுநீர் குட்டை போல தேங்கியிருப்பதாகவும், அதனை அகற்றக் கோரி மருத்துவர்களே வலியுறுத்தியும்கூட  எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிகிறது.
இந்த விவகாரத்தில் மருத்துவமனை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com