டெங்கு பரவாமல்  தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மாநகராட்சி ஆணையர் உத்தரவு

பருவமழை காலம் தொடங்கவுள்ள நிலையில், டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான  அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மண்டல அலுவலர்கள் எடுக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ்


பருவமழை காலம் தொடங்கவுள்ள நிலையில், டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான  அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மண்டல அலுவலர்கள் எடுக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:  
சென்னை பெருநகர மாநகராட்சிப் பகுதிகளில் அனைத்து மண்டலங்களிலும் சேகரமாகும் குப்பைகளில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகள் என வகைப் பிரித்து சேகரிப்பது குறித்தும், மக்கும் குப்பைகளை உரமாக்கும் மையங்கள் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரிக்கும் நிலையங்கள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.  தொடர்ந்து, உரம் தயாரிக்கும் மையங்கள், தரம் பிரிக்கும் நிலையங்களின் முழு திறன் கொள்ளளவுக்கு குப்பைகளை கையாள மாநகராட்சி அலுவலர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 
குடியிருப்புகளில் உருவாகும் குப்பையை மக்கும் மற்றும் மக்காத குப்பையாக வகைப் பிரித்து சேகரிக்கும் முறையினை முழுமையாக அனைத்து குடியிருப்புகளிலும் நடைமுறைப்படுத்துவதோடு, அனைத்து பேருந்து சாலைகள் மற்றும் உட்புறச் சாலைகளிலும் தீவிர துப்புரவுப் பணியினை பணியாளர்கள் மேற்கொள்ள வேண்டும்.
பருவமழைக் காலம் தொடங்கவுள்ள நிலையில், டெங்கு பரவுவதைத் தடுப்பதற்கு அனைத்து மண்டல அலுவலர்களும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும், வீடுகள்தோறும் டெங்கு நோயை பரப்பும் கொசு முட்டைகள் உள்ளனவா என கண்டறிந்து, அவற்றை அழிப்பதற்கு மலேரியா தடுப்புத் தொழிலாளர்கள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காலிமனைகளை கண்டறிந்து அவ்விடங்களில் குப்பைகள் சேராமலும், மழைநீர் தேக்கம் ஏற்பட்டு கொசு உற்பத்தி ஆகாதவாறும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என அதில் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com