சென்னை

வளர்ச்சித் திட்டங்கள்: பிரான்ஸுடன் சென்னை மாநகராட்சி  ஒப்பந்தம்

23rd Aug 2019 04:26 AM

ADVERTISEMENT


சீர்மிகு நகரத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் திட்டங்களை சர்வதேச அளவில் நடைமுறைப்படுத்துதல், அறிவுசார் அனுபவங்கள் பகிர்வு ஆகியவை குறித்து பிரான்ஸ் நாட்டின் கிளாரமோண்ட் ஃபெராண்ட் நகரத்துடன் சென்னை மாநகராட்சி  புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
சென்னை மாநகரின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் எடுத்து வருகிறது. இதன்படி, சென்னை மாநகரை நீடித்த நிலையான வளர்ச்சி கொண்ட நகரமாக கட்டமைக்கும் வகையில்  பிரான்ஸ் நாட்டின் கிளாரமோண்ட்  ஃபெராண்ட் நகரத்துடன் சென்னை மாநகராட்சி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ஜி.பிரகாஷ் கூறுகையில்,  இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, இரு நகரங்களுக்கிடையே ஒப்புக் கொள்ளப்பட்ட திட்டங்களில் ஒத்துழைப்பை வழங்கவும், அறிவுசார் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் செயல்திட்டம் உருவாக்கப்பட உள்ளது. இதன் மூலம் சீர்மிகு நகரத் திட்டப் பணிகளை சர்வதேச முறையில் செயல்படுத்தப்படுவதுடன், மாநகரத்துக்கு நீடித்த நிலையான வளர்ச்சியை ஏற்படுத்த முடியும். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்ற மாநகரங்களுக்கும், நகரங்களுக்கும் முன்னுதாரணமாக இருக்கும் என்றார். 
முன்னதாக, ஆணையர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியாவுக்கான ஐரோப்பிய ஒன்றிய ஆலோசகர் (சுற்றுச்சூழல், தட்பவெப்பநிலை)  ஹென்றி ஃபேர்ஜிமேன், மாநகராட்சி ஆணையர் ஜி.பிரகாஷ் ஆகிய இருவரும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதில், துணை ஆணையர்கள் எம்.கோவிந்தராவ், பி.மதுசுதன் ரெட்டி, தலைமைப் பொறியாளர் எல்.நந்தகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT