தனியார் தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்

தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.


தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
தனியார் தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் ஏற்கெனவே அறிவித்தபடி புதன்கிழமை காலை தொடங்கியது. இதனால், சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.  நிலத்தடி நீர் எடுப்பதற்கு உயர்நீதிமன்றம் வழிகாட்டுதல்படி தமிழக அரசு பல்வேறு நிபந்தனைகளை விதித்தது. தண்ணீர் கனிம வளத்தில் சேர்க்கப்பட்டதால் அரசு தவிர தனியாருக்கு உரிமை தரமுடியாது என்று அரசு அதிகாரிகள் மறுத்து விட்டனர். 
இதன் அடிப்படையில் சட்ட விரோதமாக தண்ணீர் எடுக்கும் லாரி உரிமையாளர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 
இதனால் வழக்குகளுக்கு பயந்து தண்ணீர் லாரி ஓட்டுநர்கள் பணிக்கு வருவதை தவிர்த்து வருவதாகக் கூறப்படுகிறது. எனவே தண்ணீர் எடுக்க முறையாக அனுமதி வழங்கக் கோரி தண்ணீர் லாரி உரிமையாளர்கள் புதன்கிழமை  காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். 
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நடந்த இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பல ஆயிரக்கணக்கான தண்ணீர் லாரி உரிமையாளர்கள் பங்கேற்றனர். இதனால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது.
 இதைத் தொடர்ந்து தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரிகள் உரிமையாளர்கள் சங்கம், சென்னை குடிநீர் வாரியம் இடையேயான பேச்சுவார்த்தை சென்னை கோயம்பேட்டில் புதன்கிழமை நடைபெற்றது.  அப்போது,  லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அவகாசம் தேவை என குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். 
எனினும், சுமார் 3 மணிநேரம் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.  
இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் ஓரளவு சுமுகமாக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக, தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் நிஜலிங்கம் தெரிவித்தார். 
பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிஜலிங்கம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களைச் சேர்ந்த லாரிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதி உரிமத்தை மற்ற மாவட்டங்களில் உள்ள தனியார் தண்ணீர் லாரிகளுக்கும் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 
இதையடுத்து, வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் அறிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com