பல்வேறு வண்ணம், வடிவங்களில்  மாறும் சமுதாயக் கிணறுகள்: மாநகராட்சி நடவடிக்கை

மழைநீர் சேமிப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னை மாநகராட்சியில் பாழடைந்த நிலையில் உள்ள சமுதாயக் கிணறுகள் பல்வேறு வண்ணங்கள் மற்றும் வடிவங்களில் அலங்கரிக்கப்பட்டு
சென்னை அண்ணா நகர் 2-ஆவது அவென்யூவில் தங்க நிறத்தில் வண்ணம் பூசப்பட்டுள்ள சமுதாயக் கிணறு.
சென்னை அண்ணா நகர் 2-ஆவது அவென்யூவில் தங்க நிறத்தில் வண்ணம் பூசப்பட்டுள்ள சமுதாயக் கிணறு.


மழைநீர் சேமிப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னை மாநகராட்சியில் பாழடைந்த நிலையில் உள்ள சமுதாயக் கிணறுகள் பல்வேறு வண்ணங்கள் மற்றும் வடிவங்களில் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீரைச் சேமிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் எடுத்து வருகிறது. 
அதன் ஒரு பகுதியாக, வடகிழக்குப் பருவமழைக்கு முன்பு மாநகராட்சியின் 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளில் 2 லட்சம் கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக வார்டுக்கு ஒரு குழு வீதம் 200 குழுக்கள் அமைக்கப்பட்டு கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுவரை 200 வார்டுகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட கட்டடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் இல்லாததும், சுமார் 200 சமுதாயக் கிணறுகள் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சமுதாயக் கிணறுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், தங்கள் பகுதியில் உள்ள சமுதாயக் கிணறுகளை குடியிருப்புச் சங்கங்கள், தனியார் அமைப்புகள் பராமரிக்கும் வகையிலும் பல்வேறு வடிவமைப்புகளிலும், வண்ணங்களிலும் அலங்கரிக்கப்பட உள்ளன.
அலங்கரிக்கப்படும் கிணறுகள்: இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், வடகிழக்குப் பருவமழைக்கு முன்னதாக மாநகரில் உள்ள 2 லட்சம் கட்டடங்களில் மழைநீர் கட்டமைப்புகளை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, பாழடைந்த நிலையில் உள்ள சமுதாயக் கிணறுகளைக் கண்டறிந்து, அவற்றைப் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கேரளத்தில் இதுபோன்ற சமுதாயக் கிணறுகள் பல்வேறு வடிவங்களிலும், வண்ணங்களிலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. 
இதை முன்னுதாரணமாக கொண்டு சமுதாயக் கிணறுகளின் வெளிப்புறம் பழங்கள், பறவைகள் போன்ற பல்வேறு வடிவங்களிலும், பல்வேறு வண்ணங்களிலும் வடிவமைக்கப்பட உள்ளன. 
இதில், அண்ணா நகர் மண்டலத்துக்கு உள்பட்ட பகுதியில் 19 பாழடைந்த சமுதாயக் கிணறுகள் கண்டறியப்பட்டு, அதில், 8 சமுதாயக் கிணறுகளைப் புனரமைக்கும் பணி அண்மையில் தொடங்கப்பட்டது. அதில், தற்போது, இரண்டு சமுதாயக் கிணறுகள் முழுமையாகப் புனரமைக்கப்பட்டுள்ளன. 
மேலும், அப்பகுதியில் சாலையில் தேங்கும் மழைநீர், கட்டடங்களில் உள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பில் வழியாக வரும் மழைநீர் இந்த சமுதாயக் கிணற்றுக்கு வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மழைநீர் சேகரிப்பு குறித்தும் சமுதாயக் கிணறுகளை எதிர்காலத்தில் பாதுகாப்பது குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்று தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com