சென்னை

73 -ஆவது சுதந்திர தினம்: அரசு அலுவலகங்களில் தேசியக் கொடியேற்றி கொண்டாட்டம்

16th Aug 2019 04:33 AM

ADVERTISEMENT


சுதந்திர தின விழாவையொட்டி, சென்னையில் உள்ள அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்களில் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தப்பட்டது.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள  தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடைபெற்ற  விழாவில், மாநிலத் தேர்தல் ஆணையர் ரா.பழனிசாமி தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற  விழாவில், ஆட்சியர் ஆர். சீதாலட்சுமி தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் நா.காளிதாஸ், அதிகாரிகள் கலந்து கொண்டனர். 
சேப்பாக்கத்தில் உள்ள எழிலகத்தில் நடைபெற்ற  விழாவில், வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். 
 பல்லவன் சாலையில் உள்ள சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக தலைமையகத்தில் நடைபெற்ற  விழாவில், கழக மேலாண் இயக்குநர்  கோ.கணேசன் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கடந்த பிளஸ்2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாநகரப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் குழந்தைகளுக்கு காசோலைகளை வழங்கினார். மேலும், எரிபொருளை சிக்கனமாக கையாண்ட 66 ஓட்டுநர்கள், அதிகபட்ச சராசரி வசூல் தொகை ஈட்டிய 33 நடத்துநர்கள், திறம்பட பணியாற்றிய 43 தொழில்நுட்ப பணியாளர்கள், அதிகபட்ச அபராதத் தொகை வசூலித்த 10 பரிசோதகர்கள், ஓட்டுநர்கள் உள்பட 175 பேருக்குப் பாராட்டுச் சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், கழக இணை மேலாண் இயக்குநர் கு.இளங்கோவன், உயரதிகாரிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
கோயம்பேட்டில் உள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலகத்தில்  நடைபெற்ற  விழாவில், நிறுவன மேலாண் இயக்குநர் பங்கஜ் குமார் பன்சல் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மெட்ரோ ஊழியர்களுக்காக நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற 64 அலுவலர்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர்கள் சுஜாதா ஜெயராஜ், நரசிம் பிரசாத் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் தேசியக் கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தினார். இதில், பதிவாளர் டாக்டர் பரமேஸ்வரி, பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதேபோன்று, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை உள்பட பல்வேறு அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. நோயாளிகளுக்கும், அவர்கள் உடன் இருப்பவர்களுக்கும் மருத்துவமனை நிர்வாகிகள் அப்போது இனிப்புகளை வழங்கினர்.
வங்கிகளில்...: சென்னை ராயப்பேட்டையில் உள்ள இந்தியன் வங்கி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற  விழாவில், வங்கியின் மேலாண் இயக்குநர் பத்மஜா சுந்துரு தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். நிகழ்வில், வங்கியின் செயல் இயக்குநர் எம்.கே.பட்டாச்சார்யா, உதவி மேலாளர்கள், வங்கி அலுவலர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.
சென்னை அண்ணாசாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், வங்கியின் மேலாண் இயக்குநர் கர்ணம்சேகர் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். 
எழும்பூரில் உள்ள ஓ.என்.ஜி.சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், ஓ.என்.ஜி.சி செயல் இயக்குநர் வி.ஷியாம் மோகன் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.  
சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி. நிறுவனத்தில் நடைபெற்ற  விழாவில், நிறுவனத்தின் தென் மண்டல மேலாளர் கே.கதிரேசன் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், உயரதிகாரிகள், நிறுவன ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 


 

ADVERTISEMENT
ADVERTISEMENT