சென்னை

மடிப்பாக்கத்தில் குடிநீர் திட்டப்பணிகள் தீவிரம்: இரண்டு ஆண்டுகளில் முடிக்க திட்டம்

16th Aug 2019 04:34 AM

ADVERTISEMENT


சென்னை மடிப்பாக்கத்தில் ரூ.50 கோடியில் குடிநீர் திட்டப் பணிகளை சென்னை குடிநீர் வாரியம் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டம் இரண்டு ஆண்டுகளில் பயன்பாட்டிற்கு வரும் என்றும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் மடிப்பாக்கத்துக்கு குடிநீர் கிடைக்கும் என  அதிகாரிகள் தெரிவித்தனர். 
பெருநகர சென்னை மாநகராட்சியின் விரிவாக்கப் பகுதியில் அமைந்துள்ளது மடிப்பாக்கம். இங்கு ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் வசிக்கின்றனர்.  கடந்த 20 ஆண்டுகளில், மடிப்பாக்கம் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளும், வீடுகளும் பல மடங்கு அதிகரித்துள்ளன.  இந்த நிலையில், சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டபோது, மடிப்பாக்கம் இரண்டு வார்டுகளாகப் பிரிக்கப்பட்டு, பெருங்குடி மண்டலத்தில் சேர்க்கப்பட்டது. மாநகராட்சியில் இணைந்து, 10 ஆண்டுகள் ஆனாலும், தற்போது வரை பாதாள சாக்கடை, குடிநீர் திட்டம் கொண்டு வரப்படவில்லை. இதனால் லாரி குடிநீர் மற்றும் கேன் குடிநீர் ஆகியவையே நீராதாரமாக இருந்து வருகிறது. 
 இதனால் முறையான குடிநீர் கோரி, குடிநீர் வாரியத்துக்கு மடிப்பாக்கம் பகுதி மக்கள் தொடர்ந்து மனுக்களை அனுப்பி வந்தனர். அதற்கு தீர்வு கிடைக்கும் வகையில், 187, 188 ஆகிய வார்டுகளில், வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்கும் திட்டத்துக்கான பணிகள்  கடந்த சில நாள்களுக்கு முன்பு தொடங்கப்பட்டுள்ளன.
இது குறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியது:  மடிப்பாக்கம், 187, 188 ஆகிய வார்டுகளில் உள்ள வீடுகள், குடியிருப்புகளுக்கு, குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.  இந்தப் பணிகளை இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்க முடிவு செய்யப்பட்டிருந்தது.  ஆனால் திட்டத்துக்கான தேவையான இடம் ஒதுக்கவும், தேர்தல் வந்ததாலும், பணிகள் நிறுத்தப்பட்டன.
தற்போது, முழுவீச்சில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் படி, இரண்டு வார்டுகளிலும், 96 கி.மீ. தொலைவுக்கு  குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. பள்ளிக்கரணை, கைவேலியில், 50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, 9 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்படும். வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டு, நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம், இந்தப் பகுதிக்கு குடிநீர் வழங்கப்பட உள்ளது. மொத்தம், ரூ.50 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், இரண்டு ஆண்டுகளில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT