சென்னை

சென்னை துறைமுகம் 5.30 மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாண்டு  இலக்கை எட்டியது: துறைமுகத் தலைவர் பி.ரவீந்திரன்

16th Aug 2019 04:31 AM

ADVERTISEMENT


கடந்த நிதியாண்டில் 5.30 கோடி மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாண்டு அமைச்சகம் நிர்ணயித்த இலக்கை எட்டி சென்னை துறைமுகம் சாதனை படைத்துள்ளது என துறைமுகத் தலைவர் பி.ரவீந்திரன் வியாழக்கிழமை தெரிவித்தார்.
சென்னைத் துறைமுகத்தில்    73-வது சுதந்திர தினவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.  இதில் துறைமுகத் தலைவர் பி.ரவீந்திரன் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர், மத்திய தொழிலகப் பாதுகாப்பு படை, தீயணைப்பு படை, சாரண சாரணியர், தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். இதையடுத்து, துறைமுக பள்ளி மாணவர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  அப்போது ரவீந்திரன் பேசியது:    சென்னை துறைமுகம் 5.30 கோடி மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாண்டு சாதனை படைத்துள்ளது.  கடந்த ஆண்டில் 16.20 லட்சம் சரக்குப் பெட்டகங்கள் கையாளப்பட்டுள்ளன.     தனியார் துறைமுகங்களின் போட்டியைச் சமாளிக்கும் வகையில் கப்பல்களைக் கையாள்வதற்கான கட்டணங்களில் சுமார் 20 முதல் 50 சதவீதம் வரை சலுகை அளிக்கப்பட்டு வருகிறது.  ஏற்றுமதியைவிட இறக்குமதியாகும் சரக்குப் பெட்டகங்களின் விகிதாச்சாரம் அதிகரித்து வருகிறது.  
இதனால் காலி சரக்குப் பெட்டகங்களை துறைமுகத்திற்கு மீண்டும் எடுத்துவர வேண்டிய செலவினம் ஏற்படுகிறது.  மேலும் வேறு துறைமுகங்களுக்கு காலி சரக்குப் பெட்டகங்கள் எடுத்துச் செல்வதை தவிர்க்க சென்னைத் துறைமுகத்திலேயே காலி சரக்குப் பெட்டக முற்றம் விரைவில் அமைக்கப்பட உள்ளது.   ஹூயூண்டாய் நிறுவனத் துடனான சலுகை ஒப்பந்தம் மேலும் 10 ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கார் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும். 
மேலும், கப்பல்களில் வரும் சரக்குகளை இறக்கி வைத்துக் கொள்ள தனித்தனியே கிடங்கு வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டு வருகிறது. இதற்கான முன்வைப்புத் தொகை மூன்று மாதங்கள் செலுத்த வேண்டும் என்பதிலிருந்து தற்போது 15 நாள்களுக்கான தொகையை செலுத்தினாலே போதும் என சலுகை அளிக்கப்பட்டுள்ளது  என்றார் ரவீந்திரன். இதில், துணைத் தலைவர் சிரில் ஜார்ஜ், அறங்காவலர் குழு உறுப்பினர் பிரகாஷ், துறைசார் தலைவர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT