சென்னை

பள்ளிகளில் நீர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்: கல்வித்துறை உத்தரவு

11th Aug 2019 03:26 AM

ADVERTISEMENT

பள்ளிகளில் தினமும் நீர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநர் இரா.சுடலைகண்ணன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி அனைத்து வகைப் பள்ளிகளிலும் "ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி நீர் பாதுகாப்பு நிகழ்வுகள்' தொடங்கப்பட வேண்டும். 
நீர் பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி தினமும் மாணவர்கள் குறைந்தபட்சம் ஒரு லிட்டர் தண்ணீரைச் சேமிக்கும் அளவுக்கு ஊக்குவிக்க வேண்டும். அதன்படி பள்ளிகளில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கூட்டங்களை நடத்தி பிரசாரம் செய்ய  வேண்டும். 
விளம்பர பதாகைகளைத் தயாரித்து மக்கள் பார்வையிடும் இடங்களில் வைக்க வேண்டும். விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக  மாணவர்களுக்கு ஓவியம், கவிதை, விநாடி வினா, கட்டுரை போட்டிகளை நடத்தலாம். 
எனவே, பள்ளிகளில் அன்றாட பணிகளுடன் நீர் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்கும் ஏதேனும் நிகழ்ச்சிகளை தலைமை ஆசிரியர்கள் நடத்தி, அது தொடர்பான அறிக்கையை புகைப்படங்களுடன் இணைத்து இயக்குநரகத்துக்கு அனுப்ப வேண்டும்.  இதுதொடர்பான வழிகாட்டுதல்களை தலைமையாசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும் என அதில் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT