சென்னை கே.கே.நகரில் குடிநீர் லாரி ஓட்டுநரிடம் ரூ.1 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸôர் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
திருநெல்வேலி மாவட்டம் வடக்கு அரியநாயகிபுரம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் இசக்கி (52). சென்னை குடிநீர் வாரியத்தில் குடிநீர் லாரி ஓட்டுநராகப் பணியாற்றும் இவர், வெள்ளிக்கிழமை சொந்த ஊருக்கு செல்வதற்காக கோயம்பேடுக்குப் புறப்பட்டார். இந்நிலையில், கே.கே.நகர் 100 அடி சாலையில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது அருந்திய இசக்கி, அதிக மதுபோதையினால் அங்கேயே மயங்கி விழுந்தார். சனிக்கிழமை அதிகாலை அவர், மயக்கத்தில் இருந்து எழுந்தபோது, தான் வைத்திருந்த ரூ.1 லட்சம் ரொக்கம், ஒரு பவுன் எடையுள்ள தங்க மோதிரம் ஆகியவை திருடப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து அவர், குமரன்நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.