சென்னை

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்தை கண்டித்து போராட்டம்: 749 பேர் மீது வழக்கு

11th Aug 2019 04:06 AM

ADVERTISEMENT

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து, சென்னையில் 4 இடங்களில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக 749 பேர் மீது வழக்குப் பதியப்பட்டது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதற்கு தமிழகத்தில் பெரும்பாலான அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளையில் அரசியல் கட்சியினரும், முஸ்லிம் இயக்கத்தினரும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதில் அனுமதி இன்றியும், சட்ட விதிமுறைகளை மீறியும் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது போலீஸôர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவன் அருகே ஆர்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு, சாஸ்திரி பவனை முற்றுகையிடுவதற்கு முயன்றனர். இந்தப் போராட்டத்துக்கு அந்த இயக்கத்தின் தலைவர் ஜவாஹிருல்லா தலைமை வகித்தார். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், சட்டவிரோதமாக அனுமதியின்றி கூடியதாக ஜவாஹிருல்லா உள்ளிட்ட 478 பேர் நுங்கம்பாக்கம் போலீஸôர்  சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

இதேபோல, பாரிமுனையில் ரிசர்வ் வங்கியை, எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றதாக 170 பேர் மீதும், ஆவடி ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்த முயன்றதாக எஸ்.டி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த 60 பேர் மீதும், அம்பத்தூர் ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்ட முயன்றதாக எஸ்.டி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த 41 பேர் மீதும் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை நான்கு இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் மொத்தம் 749 பேர் மீது வழக்குப் பதியப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT