திங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கண்களில் கருப்புத் துணி கட்டி போராட்டம்

DIN | Published: 07th August 2019 04:18 AM


தேசிய மருத்துவ ஆணையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாணவ, மாணவிகள் கண்களில் கருப்புத் துணி கட்டிக் கொண்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு (எம்சிஐ) பதிலாக தேசிய மருத்துவ ஆணையத்தை (என்எம்சி) மத்திய அரசு கொண்டு வருகிறது. இதற்கான சட்ட  மசோதா மக்களவை, மாநிலங்களவைகளில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு, நாடு முழுவதும் டாக்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கக்
கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் சார்பில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிக்கும் மாணவ, மாணவிகள் கடந்த 2-ஆம் தேதி வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து திங்கள்
கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம் நடத்தினர். 
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிக்கும் மாணவ, மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து தர்னா, ஆர்ப்பாட்டம், உள்ளிருப்புப் போராட்டம் போன்ற பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாணவ, மாணவிகள் கண்களில் கருப்புத்துணி கட்டி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இது தொடர்பாக மருத்துவ மாணவர்களிடம் கேட்ட போது, தேசிய மருத்துவ ஆணையத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கக்கூடாது. இந்திய மருத்துவக் கவுன்சிலை ஒழிக்கக்
கூடாது. நெக்ஸ்ட் தேர்வை திணிக்கக்கூடாது. வரைவு தேசியக் கல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப்பெற வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. எங்களுடைய கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றனர்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

சென்னையில் பரவலாக மழை
சென்னையில் அணிவகுத்த பழங்கால கார்கள்
ரசாயனத்தால் ஆன விநாயகர் சிலைகளை பயன்படுத்தக் கூடாது: மாசுக் கட்டுப்பாடு வாரியம் உத்தரவு
தமிழகத்தில் மேலும் 7 நகரங்களில் போதை மறுவாழ்வு மையங்கள்: விரைவில் அமைக்கத் திட்டம்
பள்ளிகளில் தேசிய பசுமைப்படை: இரு மடங்காக அதிகரிக்க முடிவு